80களில் பட்டைய கிளப்பிய இரட்டை இசையமைப்பாளர்கள் மனோஜ் கியான்
80களில் இளையராஜாதான் இசையமைப்பில் மிக உச்சத்தில் இருந்தார். இதை அடிப்படையாக வைத்து பல சிடி கேசட் தயாரிப்பவர்கள் கூட 80களில் வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்த நல்ல பாடல்களை கூட இளையராஜா ஹிட்ஸோடு சேர்த்து விட்டு சிடி தயாரித்து பஸ் ஸ்டாண்ட் கடைகளில் பார்த்து லாபம் பார்த்து வருகின்றனர்.
அதாவது 80களில் யார் நன்றாக இசை அமைத்தாலும் அது இளையராஜாதான் என்ற தவறான எண்ணமும் சிலரிடம் இருந்தது. இளையராஜா தவிர்த்து மனோஜ் க்யான், சந்திரபோஸ், தேவேந்திரன் உள்ளிட்டோரும் இளையராஜா புகழுடன் இருந்த காலத்தில் இசையமைத்தனர்.
இவர்களில் மனோஜ் க்யான் பல படங்களில் இசையமைப்பில் பட்டைய கிளப்பினர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் தலைமையேற்று அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள் படத்தில்தான் மனோஜ்- கியான் என இரட்டை இசையமைப்பாளர்கள் அறிமுகமாகினர்.
இருவரின் சிந்தனையில் தோன்றிய மெட்டுகள் பல ஹிட்டுகள் ஆகின.
முதல் படம் ஊமை விழிகளில் பாடல்கள் ஹிட் ஆனாலும் அந்த படம் சைக்கோ த்ரில்லர் படம் என்பதால் அந்த படத்தின் பின்னணி இசையை மிக டெரராக அமைக்க வேண்டிய கட்டாயம் ஆனால் அதையும் சிறப்பாக அமைத்து இன்று வரை ஊமை விழிகள் படத்துக்கு இவர்களின் இசை முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
ஊமை விழிகள் படத்தில் இடம்பெற்ற தோல்வி நிலை என, மாமரத்து பூ எடுத்து, ராத்திரி நேரத்து பூஜையில் உள்ளிட்ட பாடல்கள் ஹிட் ஆகின
ஹிந்தியில்தான் இவர்கள் ரூஹி என்ற படத்தில் அறிமுகமாகினர்.தமிழில் இயக்குனர் ஆர்.வி உதயக்குமார் இயக்கிய முதல் படமான உரிமை கீதம் படத்துக்கு இவர்கள்தான் இசையமைத்தனர் அந்த படத்தில் இடம்பெற்ற மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் என்ற பாடல் மிக ஹிட் ஆன பாடலானது.
அதுபோல் வெளிச்சம் என்ற கார்த்திக் நடித்த படத்துக்கும் இவர்கள்தான் இசை. அதில் இடம்பெற்ற துள்ளி துள்ளி போகும் பெண்ணே என்ற பாடல் இவர்கள் இசையமைப்பில் அதிரி புதிரி ஹிட் ஆனது.
இவர்கள் இசையமைப்பில் மிகப்பெரும் ஹிட் ஆன ஆல்பம் விஜயகாந்த் , ராம்கி நடிப்பில் வந்த செந்தூரப்பூவே என்ற படத்தின் ஆல்பம்தான். இந்த படத்தின் கேசட்டுகள் விற்று தீர்ந்தன அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. செந்தூரப்பூவே, வாராங்க வாராங்க பன்னாடி வாராங்க போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாகின.
இணைந்த கைகள் படத்தில் இருவரும் பிரிந்தனர் கியான் மட்டும் கியான் வர்மா என்ற பெயரில் இணைந்த கைகள் படத்துக்கு இசையமைத்தார் அந்த படத்தில் வந்த அந்தி நேர தென்றல் காற்று, மலையோரம் குயில் கூவ கேட்டேன் போன்ற பாடல்களும் மிகவும் ஹிட் ஆன பாடல்கள்.
விஜயகாந்த் நடித்த உழவன் மகன், சத்யராஜ் நடித்த தாய் நாடு உள்ளிட்ட இவர்கள் இசையமைத்த படங்களின் பாடல்களும் ஹிட்தான். அதில் உழவன் மகன் படத்தில் டி.எம்.எஸ் பாடிய உன்னை தினம் தேடும் தலைவன் பாடல் செம ஹிட். அது போல தாய்நாடு படத்தில் வரும் ஒரு முல்லைப்பூவிடம் போன்ற பாடல்களும் ஹிட் .80களில் எஸ்.பி.பி, மனோ, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் என பின்னணி பாடகர்கள் முன்னணி நடிகர்களின் பாடல்களை பாடிக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் தங்கள் படங்களின் முக்கிய பாடல்களை பழம்பெரும் பாடகர் டி.எம்.எஸ் என அழைக்ககூடிய டி.எம் செளந்தர்ராஜனை அழைத்து பாடவைத்து அவருக்கு பெருமை சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் கியான் இயற்கை எய்தினார். மனோஜ் மட்டும் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில் விஜய் நடித்த என்றென்றும் காதல் படத்தை இயக்கி இசையமைத்தார் இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆனால் படம் தோல்வி. இது போல் பிரசாந்த்தை வைத்து குட்லக் என்றொரு படத்தை இயக்கினார் அதுவும் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.
காலங்கள் கடந்தாலும் இவர்களது இசை மெட்டுக்கள் தமிழக திரைவானை விட்டும் ரசிகர்கள் மனதை விட்டும் மறையாது.