மனோரமாவை காதலித்து ஏமாற்றிய கணவர்… ஆச்சிக்கு இப்படி ஒரு சோகக்கதை இருக்கா??... அடக்கடவுளே!!
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த மனோரமா, சிறு வயதில் இருந்தே எண்ணிலடங்கா துயரங்களை சந்தித்தவர். மனோரமா பிறந்தபோது பெண் குழந்தை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக அவரது தாயாரை கைக்குழந்தையோடு வீட்டை விட்டு விரட்டி அடித்தார் அவரது தந்தையார்.
கைக்குழந்தையாக இருந்த மனோரமாவை தூக்கிக்கொண்டு மன்னார்குடியில் இருந்து பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தார் அவரது தாயார். சில காலங்களுக்குப் பிறகு அங்கிருந்த பள்ளி ஒன்றில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மனோரமா. எனினும் ஒரு கட்டத்தில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பண்ணையாரின் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்கிற பணிக்குச் சேர்ந்தார் மனோரமா.
மனோரமா சிறு வயதிலேயே நன்றாக பாடக்கூடியவர் என்பதால் நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதனை தொடர்ந்து பல நாடகங்களில் நடித்த மனோரமாவின் நடிப்பை பார்த்து பலரும் அசந்துபோனார்கள். அதன் பின் மிகப் பிரபலமான நாடக நடிகையாக வலம் வந்தார் மனோரமா.
அந்த காலகட்டத்தில் நடிகர் முத்துராமன் தனது நண்பர்களுடன் இணைந்து கலைமணி நாடகசபா என்ற நாடக கம்பெனியை தொடங்கியிருந்தார். அந்த நாடக கம்பெனியில் இருந்து மனோரமாவுக்கு அழைப்பு வந்தது. அதன் பின் அந்த நாடகக் குழுவில் சேர்ந்த மனோரமா பல அந்த குழுவின் சார்பாக நாடகங்களில் நடித்து வந்தார்.
அப்போது அந்த நாடக சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம்.ராமநாதன் என்பவர் மனோரமாவை மிகத் தீவிரமாக காதலிக்கத் தொடங்கினார். மனோரமாவும் அவரை காதலிக்கத் தொடங்க இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுடைய திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றுகொண்டிருந்த வேளையில், மனோரமாவின் வயிற்றில் வாரிசு உண்டானது. கர்ப்பமான 9 ஆவது மாதத்தில் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்து சேர்ந்தார் மனோரமா. குழந்தை பிறக்கும் வரை ராமநாதன் மனோரமாவை வந்து சந்திக்கவே இல்லை.
சரியாக குழந்தை பிறந்த 15 ஆவது நாள் மனோரமாவை சந்திக்க வந்தார் ராமநாதன். குழந்தையை பார்ப்பதற்குத்தான் ஆசையாக வந்திருக்கிறார் என்று நினைத்த மனோரமாவின் தலையில் இடிதான் விழுந்தது. வீட்டிற்குள்ளே நுழைந்தவுடன் நாடகத்தில் நடிப்பதற்காக மனோரமாவை அழைத்தார் ராமநாதன்.
குழந்தை பிறந்து 15 நாட்கள்தான் ஆகிறது இப்போது எப்படி வரமுடியும் என மனோரமா கூற, “இப்போது நீ வரப்போகிறாயா இல்லையா?” என கத்தினாராம் ராமநாதன். “என்னால் குழந்தையை விட்டுவிட்டு வரமுடியாது” என திடமாக கூறினார் மனோராமா. இதனை கேட்டப்பின் ராமநாதன் அந்த வீட்டை வெளியேறினார். அதன் பின் வாழ்நாள் முழுவதிலும் மனோரமாவை பார்க்க அவர் வரவேயில்லை.
தனது கணவர் மீண்டும் வருவார் என்று காத்துக்கொண்டிருந்த மனோரமாவிற்கு அவரிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ்தான் வந்தது. அதன் பிறகுதான் மனோரமாவுக்கு தனது கணவர் செய்த துரோகம் தெரியவந்ததாம்.
அதாவது ராமநாதன் மனோரமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதற்கான காரணம், அந்த நாடகக்குழுவை விட்டு அவர் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காகத்தானாம். இதனை கேள்விப்பட்டதும் மனோரமாவின் நெஞ்சம் உடைந்துப்போனதாம்.
விவாகரத்துக்குப் பின் இனி யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என முடிவெடுத்த மனோரமா, தன் மகனுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார்.