நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். ஒருபக்கம் அவர் சினிமாவுக்கு வந்தும் 50 வருடங்கள் ஆகிவிட்டது. 75 வயதிலும் ஆக்டிவாக சினிமாவில் அதுவும் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இன்று ரஜினிக்கு பிறந்தநாள் என்பதால் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் திரையுலகிலும் பல நடிகர்கள், இயக்குனர்கள் ரஜினிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
வயதை வென்ற வசீகரம்.. எல்லோரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை.. கள்ளம் கபடமற்ற நெஞ்சம் என வாழ்த்தியிருருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நடிகரும் ரஜினியின் முன்னாள் மருமகனுமான தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் ‘ஹேப்பி பர்த்டே தலைவா’ என பதிவிட்டிருக்கிறார். ரஜினியின் 50 ஆண்டு கால நண்பர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் ‘75 வருடம் மறக்க முடியாத வாழ்க்கை.. 50 வருடம் சினிமாவில் லெஜன்ட்.. நண்பருக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் பிறந்தநாளுக்காகவே உருவாக்கிய பிரத்யோக வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘தலைவருக்கு வாழ்த்து.. Iconic சூப்பர் ஸ்டார்.. சிறப்பான பிறந்தநாள்’ என பதிவிட்டுள்ளார்.
இயக்குனரும் ரஜினியின் தீவிர ரசிகருமான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘ஹேப்பி 75 தலைவா.. நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைய மகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ வேண்டும்.. சினிமா மூலமாக நீங்கள் எங்களை இன்னும் பல வருடங்கள் சந்தோஷப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.. எங்கள் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி.. உங்களை எப்போதும் நேசிக்கிறோம்’’ என ஃபீல் பண்ணி வாழ்த்து சொல்லியிருக்கிறார்.