ஓடிடிக்கு படம் பண்ணும் மாரி செல்வராஜ்… ஆனால் தியேட்டரில் தான் ரிலீஸ்… ஒரே குழப்பமா இருக்கே!!
“பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது “மாமன்னன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் “மாமன்னன்” திரைப்படத்தை தொடர்ந்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறாராம். அத்திரைப்படத்தில் கலையரசன் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இத்திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். அதாவது ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து திரையரங்குகளில் வெளியிடுகிறது. அதன் பின் வழக்கம்போல் சில வாரங்கள் கழித்து ஹாட்ஸ்டாரில் வெளிவருமாம்.
இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் சமூகத்தில் நிழவும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களாகும். இவரது முதல் திரைப்படமான “பரியேறும் பெருமாள்” ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகவே பேசியது. இத்திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வு குறித்த ஒரு உரையாடலை உருவாக்கியது. அந்த உரையாடலை இத்திரைப்படத்தின் இறுதி காட்சியில் வரும் டீ கிளாஸ்களின் மூலம் நிகழ்த்தினார் என்று கூட கூறலாம்.
அதே போல் தனுஷை வைத்து இயக்கிய “கர்ணன்” திரைப்படம் முந்தைய திரைப்படத்தை விட மிகவும் அனல் கக்கியது போல் ஆதிக்கத்தை எதிர்த்து களமாடியது. மேலும் இத்திரைப்படம் சில சர்ச்சைகளையும் உண்டு செய்தது.
இந்த நிலையில் தான் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இத்திரைப்படம் நகரத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் இத்திரைப்படம் மும்முரமாக உருவாகிவருவதால் விரைவில் வெளியீடு குறித்தான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.