3 நடிகர்கள் லிஸ்ட்ல இருக்காங்க!. எதுவுமே இல்லனா அந்த படம்!.. மாரி செல்வராஜ் போடும் ஸ்கெட்ச்!…

mari
இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர் மாரி செல்வராஜ். தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த மாரி செல்வராஜுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் சந்தித்த மற்றும் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களின் வாழ்வியலையும் திரையில் பேச வேண்டும் என்பதே எண்ணம். அந்த மக்களின் உரிமை பேச சினிமா எனும் கருவியை அவர் பயன்படுத்தி வருகிறார்.
இவர் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முதல் படத்திலேயே அதிர வைத்தார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் கல்லூரியில் படிக்கும்போது சந்திக்கும் பிரச்சனைகள், உயர் சாதியினர் அவனை நடத்தும் விதம் எல்லாவற்றையும் இந்த படத்தில் பதிவு செய்திருந்தார். பல குறியீடுகளையும் இந்த படத்தில் அமைத்திருந்தார். இந்த படம் நல்ல வசூலையும் பெற்றது.
அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். 90களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்பதால் புளியங்குளம் பகுதியில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்லும். அதை அடிப்படையாக வைத்தும் அதற்காக மக்கள் போராடுவது போல காட்சிகளை அமைத்திருந்தார். இந்த படமும் ஹிட் அடித்தது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவை வைத்து இயக்கிய மாமன்னன் படத்தில் அரசியலில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை அரசியல்வாதிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை காட்டியிருந்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்றது. அடுத்து அவரின் இயக்கத்தில் வாழை படம் வெளியானது. இதுவும் ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இப்போது விக்ரம் மகன் துருவை வைத்து பைசன் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இது கபடி விளையாட்டு தொடர்புடையது. மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கார்த்தியும் சம்மதம் சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரின் கைகளிலும் நிறைய படங்கள் இருக்கிறது. ஒருபக்கம், சியான் விக்ரமும் மாரியிடம் ‘நல்ல கதை இருந்தா சொல்லுங்க’ என சொல்லியிருக்கிறார். ஆனால், அடுத்து அவர் மண்டேலா பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
எனவே, தனுஷ், கார்த்தி, விக்ரம் என யாரை வைத்தும் அடுத்த படத்தை துவங்க முடியாத நிலை இருக்கிறது. யார் நடிக்க முன் வருகிறாரோ அவரை வைத்து எடுப்போம். இல்லையெனில், வாழை போல ஒரு சின்ன படத்தை இயக்குவோம் என்கிற முடிவில் மாரி செல்வராஜ் இருக்கிறாராம்.