மிச்ச மீதி சாப்பாட்டை ஓசி வாங்கி சாப்பிடுவேன்!.. மாரி செல்வராஜ் சொல்லும் பிளாஷ்பேக்!..
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் மாரி செல்வராஜ். பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை பார்த்தவர். பல கஷ்டங்களை சந்தித்துவிட்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார். சென்னையில் பல இடங்களிலும் இவர் வேலை செய்திருக்கிறார்.
ஒரு வீடு, சரவணா ஸ்டோர்ஸ், பெட்ரோல் பங்க், கொத்தனார் வேலை என பல வேலைகளையும் மாரி செய்திருக்கிறார். அதன்பின்னர்தான் இயக்குனர் ராமிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரின் இயக்கத்தில் வெளியான சில படங்களில் வேலை செய்து இயக்கத்தை கற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: கூட்டத்த பாத்து ஓட்டு வரும்னு நினைக்கக் கூடாது! விஜயை வடிவேலுவாக்கிய கருணாஸ்
மாரிக்கு எழுதும் பழக்கம் அதிகம். அதுதான் அவரை இயக்குனராக மாற்றி இருக்கிறது. அதுவும் தனது சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதைகளை எழுதி அதை ரசிக்கும்படி ஒரு சினிமாவாக மாற்றும் வித்தை மாரிக்கு நன்றாகவே கை வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல விவாதங்களையும் துவக்கி வைத்தது. அடுத்து தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படமும் நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானதுதான். அதேபோல், அவர் இயக்கிய மாமன்னன் படமும் ரசிகர்களிடம் அதிர்வலைகளை உண்டாக்கியது.
அடுத்து தான் சிறுவனாக இருக்கும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அடிப்பையாக வைத்து வாழை என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. மிஷ்கின், பாலா, வெற்றிமாறன், ரஞ்சித், மணிரத்னம் போன்றவர்களும் இப்படத்தை பாராட்டி பேசியிருக்கிறார்கள்.
இந்நிலையில், சென்னை வந்த புதிதில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘சென்னையில் உதவி இயக்குனராக வேலை செய்வதற்கு முன் கையில் காசே இருக்காது. பயங்கரமாக பசிக்கும். ஒரு வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு தண்ணி நிறைய குடிப்பேன். அப்புறம் இரவு 12 மணிக்கு ஃபாஸ்ட் புட் கடை மூடுற நேரத்தில் போனால் மிச்சம் மீதி இருக்கும் ஃபிரைட் ரைஸ் கொடுப்பார்கள். அதை வாங்கி நாங்க 3 பேர் சாப்பிடுவோம்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் படத்துக்கு ட்ரோல்… தொடர்ந்து வந்த விபரீதம்… நடந்தது இதுதான்!