அப்ப கேப்டன் இல்லையா?...வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ ஃபர்ஸ்ட்லுக்...
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த பல வருடங்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சரியாக பேச முடியாத, நடக்க முடியாத, தன்னை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை கூட அறிய முடியாத ஒருவராக அவர் இருக்கிறார்.
ஆனால், ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ எனும் புதிய படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இப்படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரம் அவரின் மைத்துனர் சுதீஸ் மற்றும் பிரேமலதாவுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர்கள் விஜயகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது.
இந்நிலையில், திடீரென நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்ர் வெளியானது. அதில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி மட்டுமே இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் விஜயகாந்த் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.