Cinema News
எல்லாரும் நடிக்குறாங்க… ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனோட கால் தூசி!.. வெடிக்கும் மீசை ராஜேந்திரன்…
Vijayakanth: நடிகர் சங்க முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த சமீபத்தில் மரணமடைந்தார். பெரிய நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் மட்டுமே நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால்., அஜித், வடிவேலு, சூர்யா, நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், விக்ரம் என பெரும்பலான நடிகர்கள் வரவில்லை.
இது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. அதோடு, விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர் சங்கம் பெரிதாக எதையும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், விஜயகாந்துடன் பல வருடங்கள் பயணித்தவரும், நடிகருமான மீசை ராஜேந்திரன் ஊடகம் ஒன்றில் பேசிய போது கூறியதாவது:
நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி இவர்களெல்லாம் நடிகர்கள் இல்லை. கேப்டன் இறந்து ஒரு வாரம் கழித்து வந்து அவரின் சமாதியில் நடிக்கிறார்கள் பாருங்கள் அவர்கள்தான் அருமையான நடிகர்கள். சிறப்பாக நடிக்கிறார்கள். சூர்யாவோ, விஷாலோ நினைத்திருந்தால் ஒரு விமானத்தை பிடித்து அடுத்தநாளே வந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் வரவில்லை. இவர்களெல்லாம் கேப்டனுக்காக வரவில்லை. கலைஞர் 100 விழாவுக்கு வந்தவர்கள். மக்கள் திட்டுவார்கள் என்பதால் இங்கு வந்துவிட்டு கலைஞர் விழாவுக்கு போனார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷெல்லாம் கேப்டனின் கால் தூசி. விஜயகாந்தை பற்றி பேச அவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?.. சூர்யா வந்து அழுகிறார்.. ‘நான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்தை போல எல்லோருக்கும் ஒரே சாப்பாடு போடுவேன்’ என அருண் விஜய் சொல்கிறார். இதை ஏன் இத்தனை வருடங்களாக அவர் செய்யவில்லை?.. எத்தனை நாளைக்கு போடுவார்?.. விஜயகாந்த பல வருடங்களாக அதை செய்தார்?. சும்மா நடிக்கிறார்கள்…
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால். அப்பட்டமாக நடிக்கிறார். ‘நடிகர் சங்கத்தின் கடனை மீட்டவர் விஜயகாந்த. எனவே, அந்த கட்டிடத்திற்கு அவரின் பெயரை வைப்பீர்களா?’ என செய்தியாளர் கேட்டால் மழுப்பலாக பதில் சொல்கிறார். கார்த்தியிடம் நானே நேரில் கேட்டேன். அவரும் அப்படித்தான் மழுப்புகிறார்.
திரையுலகில் உள்ள எல்லோருமே விஜயகாந்த் மூலம் பயனடைந்தவர்கள்தான். ஆனால், இவர்களுக்கெல்லாம் நன்றி உணர்ச்சியே இல்லை. நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை. வடிவேலு யார் சாவுக்கும் போக மாட்டார்.. அவர் சாவுக்கு யார் போகிறார் என ஒரு நடிகரே சொன்னார். அப்படி சொல்ல வேண்டாம் என நானே சொன்னேன்’ என ராஜேந்திரன் பேசியிருந்தார்.