பாக்ஸ் ஆபீசில் இடம்பிடித்து 2022ல் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடிய தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை
இந்த ஆண்டு தமிழ்சினிமாவின் பெருமையை உலகமே பேசியது என்று தான் சொல்ல வேண்டும். 2 ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் சிக்கித் தத்தளித்த தமிழ்சினிமாவிற்கு பெரிய நடிகர்கள் படங்கள் கூட சொல்லும்படியான வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்ற போது ஆபத்பாந்தவனாக வந்த உலகநாயகன் கமல் இப்படி ஒரு இமாலய வெற்றியைத் தருவார் என்று யாருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த அளவு வெற்றியை ஈட்டித் தந்து உலக அரங்கில் கவனம் பெற்றது. தொடர்ந்து வசூலை அள்ளிக் குவித்த பிற படங்களையும் காணலாம்.
விக்ரம்
ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இந்த ஆண்டில் வசூலைத் தெறிக்க விட்டது. ஜூன் 3ல் வெளியான இந்தப்படம் தமிழ் சினிமா உலகில் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றது.
இதுவரை 420 கோடிக்கு மேல் வசூலித்து விட்டது. உண்மையிலேயே கமல் வசூல் ராஜா தான் என்று நிரூபித்து விட்டார். இந்தப்படம் பாகுபலி படத்தின் வெற்றியை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியானது. ஒரு அதிரடி திரைப்படம்.
பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து படம் பார்க்க வைத்தது. கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா, காயத்ரி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் 252 கோடியை வசூலித்துள்ளது.
நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் 179 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. பாண்டிராஜின் இயக்கத்தில் டி.இமான் இசையில் வெளியான படம்.
சூர்யாவுடன் வினய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வலிமை
போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் வெளியான வலிமை படம் அந்த அளவில் பிக் அப் இல்லை என்றாலும் வசூலில் சோடை போகவில்லை. 155 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வினோத் இயக்கத்தில் ஜிப்ரானின் பின்னணி இசையில் உருவான படம் வலிமை.
யுவன் சங்கர் ராஜா பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அஜீத்குமாருடன் நரேன், ஹ{மா குரேஷி, சோபியா, சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். பைக் ரேஸை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
டான்
சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து நடிக்க உடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனத்தின் டான் படம் 100 கோடியைத் தொட்டுவிட்டது. சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான படம்.
சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு காமெடி படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.