Cinema History
மெட்டி ஒலி காற்றோடு…என் நெஞ்சில் தாலாட்ட பாடலின் சுவாரசியங்கள்
இசைஞானி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் மேஸ்ட்ரோ இளையராஜா தான். இசையில் ஒரு புரட்சியை செய்தவர். இவரது பாடல்கள் எல்லாமே நமக்கு ஒரு அருமருந்துதான். அவரது இன்னிசையில் மறக்க முடியாத படம் சாவி. இந்தப் படத்தில் உள்ள இளையராஜாவின் பாடல்கள் எப்படி இருந்தன என்பதைப் பார்ப்போம்.
சாவி இதழில் வெளியான தொடர்கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மகேந்திரன் இயக்கிய படம் மெட்டி. 1982ல் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ்.
செந்தாமரை, விஜயகுமாரி, சரத்பாபு, ராஜேஷ், வடிவுக்கரசி, ராதிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் மெட்டி ஒலி காற்றோடு பாடல் நம்மை தாலாட்டுகிறது. இளையராஜா, ஜானகியின் குரல்கள் பாடலை ரசிக்கச் செய்தது.
படத்தில் இந்தப் பாடலைப் பார்க்கும்போது ஆதரவற்ற தாயும், அவரது இரு மகள்களும் தான் காட்டப்படும். கடல் அலைகளுக்கு அருகே தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கியபடி அன்பின் உற்சாகமிகுதியில் இரு பெண்களும் ஆனந்தமாக கூத்தாடுகின்றனர். இதுதான் அந்தப் பாடல்.
முதலில் இயற்கையின் ரம்மியத்துக்கு இடையே ஜானகியின் இனிமையான முணுமுணுப்பு பாடலைத் தொடங்கி வைக்கும். அடுத்ததாக ஏகாந்தமான குரலில் இளையராஜாவின் ஆலாபனை நம்மை உற்சாகப்படுத்தும். அவரது குரலானது சற்றே கணகணப்பாக காதலும் பாந்தமும் கலந்து நிரம்பி வழியும்.
பல்லவியையும், சரணத்தையும் இணைக்கும் இசைப் பாலத்தின் இதழ்களை வயலினால் நெய்து இருப்பார் இளையராஜா. 16 வினாடிகள் நீளும் அந்த ஒற்றை வயலின் இசையில் உலகின் சௌந்தர்யங்கள் அனைத்தையும் அடக்கியே வாசித்திருப்பார் இளையராஜா.
முதல் நிரவலில் வயலின் இசை, அடுத்து 13 வினாடிகள் வரை தொடரும் ஜானகியின் ஹம்மிங் நம்மை ஆச்சரியக்கடலில் மிதக்க வைக்கும்.
இந்த ஹம்மிங் தமிழ் தெரிந்த தேவதையின் வருகையை உணர்த்துகிறது. பாடலின் இடையே அவ்வப்போது சிணுங்கும் கணப்பொழுதில் ஜானகியின் குரல் சிலிர்ப்பூட்டும்.
பாடலில் கங்கை அமரனின் ரசனைக்குரிய வரிகளாக பார்வை பட்ட காயம்….பாவை தொட்டு காயும் என்று வரும். அட அட எவ்வளவு அற்புதமான கற்பனை என்று நம்மை ரசிக்க வைக்கும் பாடல் இது.
இந்தப்பாடலுக்கான கதையைச் சொல்ல வேண்டும் என்றால் அது சுவாரசியமானது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு தன் பின்னே சுற்றும் எழுத்தாளர் ராஜேஷிடம், நிபந்தனைகளுடன் ராதிகா பாடும் பாடல். கல்யாணம் என்னை முடிக்க, மனதுக்கு மிக நெருக்கமான குரலில் இப்பாடலைப் பாடியிருப்பவர் ஜென்ஸி.
இடையிடையே ரயிலில் திருமணம், நொச்சிக்குப்பம் பச்சையப்பன் குரூப்பின் நாதஸ்வர இசை என பாடல் கலகலப்பையும் தரும். மன அழுத்தங்களுக்கு இடையே இந்த இசையைக் கேட்கும்போது நம்மை சிரிக்க வைக்கும். பெண்களின் குறும்புகளை மெலிதாக இப்பாடல் பதிவு செய்திருக்கும் விதம் நளினம்.
படத்தின் இன்னொரு முக்கியமான பாடல் கே.பி.பிரம்மானந்தன் பாடிய சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் தனது தங்கையின் திருமணம் பற்றிய கனவுகளுடன் அண்ணனும், அண்ணனின் அளவற்ற அன்பில் திளைக்கும் தங்கையும் தோன்றும் இப்பாடல். ஒரு பாடலின் இனிமை குலையாமல் படமாக்குவது எப்படி என்பதற்கான பாடம் இதுதான்.
மெல்லிய மாலைப்பொழுதின் கடல் அலைகள், அடர் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட இடங்கள், சூரிய ஒளியில் மின்னும் சில்வர் குடங்கள் என்று அசோக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவு ரசனைக்கு விருந்து.
வெல்லப்பாகைக் குழைத்து இழையாக நீட்டிச் செல்வது போன்ற உச்சபட்ச இனிமை கொண்ட வயலின் இசையுடன் இப்பாடல் தொடங்கும். மனதினில் இன்பக் கனவுகளே எனும் வரிகளை ரசித்தபடி ஆமோதிக்கும் வகையில், வீணை இசையின் சிறு துணுக்கை ஒலிக்க விடுவார் இளையராஜா. இந்தக் கணம் தான் நம் மனதை இளகச் செய்யும். பாடல் முழுவதும் நம் உடலின் எடையை லேசாக்கும்.
மதுக்கூர் கண்ணன் எழுதிய ராகம் எங்கேயோ …தாளம் எங்கேயோ பாடல் செம. பிரம்மானந்தன், உமா ரமணன், சசிரேகா ஆகியோர் பாடி அசத்தியுள்ளனர்.
அழுத்தமான கஜல் பாடல் இது. தாயின் இழப்பு தரும் தாங்க முடியாத சோகத்தால் நம்மை வருடியிருப்பார் இசைஞானி. மலையாளத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை அழகாகப் பாடியிருக்கும் பிரம்மானந்தன் தமிழில் பாடிய படம் இதுவாகத் தான் இருக்கும்.
இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.