கலைஞரின் வசனத்தில் புரட்சித்தலைவரின் வெற்றி நடை போட்ட படங்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். இருவருமே அவரவர் துறையில் பெரும் ஜாம்பவான்கள். இரு துருவங்களும் இணைந்தால் படம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? வாங்க பார்க்கலாம்.
காஞ்சித்தலைவன் படத்தில் எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர். நடித்த ஒரு காட்சியில் பேசும் வசனம் சூப்பராக இருக்கும். எம்ஜிஆர் சொல்கிறார். மாலையில் சூடிய மலரைக் காலையில் தூக்கி எறிவதைப் போல உன் காதலைத் தூக்கி எறிந்து விட்டான் பரஞ்சோதி என எஸ்எஸ்ஆரைப் பார்த்து எம்ஜிஆர் சொல்வார்.
புதுமைப்பித்தன் படத்தில் டி.எஸ்.பாலையா எம்ஜிஆரைப் பார்த்து சீவகா என்பார்...அதற்கு எம்ஜிஆர் சித்தப்பா....நீ இப்ப செத்தப்பா...என்பார். அட ஆண்டவனே என தலையில் கை வைப்பார். ஆண்டவனே...ஆண்டவனே....கொன்றுவிட்டது இந்தக்கானகத்து வேங்கை... ஆண்டவனை ஆண்டவனை இந்த நாட்டை ஆண்டவனை...இந்த அரசை ஆண்டவனை என்பார். இந்தப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.
மருதநாட்டு இளவரசி படத்தில் எம்ஜிஆர் ஜானகியுடன் பேசும் காட்சி செமயாக இருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு வீடு கட்டிய புண்ணியம்? புண்ணியம் சம்பாதிக்க வீடா கட்டுவாங்க? சத்திரம் அல்லவா கட்டணும்? வீடுன்னா ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து வாழணும். ஏன்...ஆம்பள மாத்திரம் வாழ்ந்தா,..? அது ஆசிரமம்.
பொம்பள தான் வீட்டுக்குக் குடும்ப விளக்கு. ஆமா...பொம்பள விளக்கு...ஆம்பள விட்டில் பூச்சி. ம்ஹீம்...பொம்பள புஷ்பம்...ஆம்பள வண்டு. பொம்பள பாம்பு...ஆம்பள மகுடி.
பாவம் சரியான தோல்வி...உங்கள எதிர்த்து யாரும்மா ஜெயிச்சா..? உங்க பார்வையே ஒரு பாணமாச்சே...மிருக ஜாதில புலி மானைக் கொல்லுது. மனித ஜாதியில மான் புலியைக் கொல்லுது.
ராஜகுமாரி படத்தில் பிற பெண்களைத் தாயாகவும் தங்கையாகவும் கருதுவதுதான் எங்கள் இந்திய நாட்டு தர்மம் என்பார் எம்ஜிஆர். இது வாழ்வை ருசிக்கத் தெரியாத பைத்தியக்கார உலகம் என்பார் நாயகி.
பைத்தியக்காரர் கண்களுக்கு உலகமே பைத்தியமாகத் தான் தோன்றும் என்பார். பேச்சை மாற்ற வேண்டாம். என் ஆட்டம் எப்படி? அதைச் சொல்லுங்கள் என்பார். கட்டுக்கடங்காதது. கருத்தைக் கலக்குவது. அம்மா .... கலைவாணி இங்கு தலை கூட நீட்ட மாட்டார்.
இன்னும் மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அபிமன்யு, அரசிளங்குமரி என பல படங்களில் கலைஞரின் வசனத்தில் எம்ஜிஆர் நடித்து அசத்தியுள்ளார். அனைத்துப் படங்களுமே பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டன.