Cinema History
முதல்வர் ஆவதற்கு முன் நம்பியாருடன் எம்.ஜி.ஆர் போட்ட சண்டை!.. நடந்தது இதுதான்!..
மக்கள் பணியாற்றுவதற்காக சினிமாவிலிருந்து அரசியலுக்கு போனாலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை எம்.ஜி.ஆருக்கு இருந்து கொண்டே இருந்தது. முதன்முறை முதல்வராக பதவி ஏற்றதும் முக்கிய அதிகாரிகளிடம் ‘முதல்வராக இருக்கும் நான் சினிமாவில் நடிக்கலாமா?. சட்டம் என்ன சொல்கிறது?’ என கேட்டவர்தான் எம்.ஜி.ஆர்.
‘முதல்வர் பதவியில் இருந்தாலும் நீங்கள் சினிமாவில் நடிக்கலாம்’ என அதிகாரிகள் சொன்னாலும் எம்.ஜி.ஆருக்கு அது சாத்தியப்படவில்லை. தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். முதல்வருக்கான கடமை அதிகம் என்பதால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!
ஆனாலும், கமல்ஹாசன், பாக்கியராஜ், சத்தியராஜ், பாரதிராஜா ஆகியோருடன் நேரம் செலவழித்து தனது சினிமா ஆசையை அவர் தீர்த்துகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை இயக்கி நடித்தார். அதுதான் அவரின் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படமாகும்.
முதல்வரான பின் தன்னை நேசிக்கும் கமல், பாக்கியராஜ், சத்தியாஜ், பாரதிராஜா ஆகியோரின் படங்களை தவறாமல் பார்த்து தனது கருத்துக்களை சொல்லி வந்தார். அதோடு, அந்த படங்களின் வெற்றி விழாக்களிலும் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். ஒருகட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு எல்லாவற்றிலிருந்தும் விலகினார்.
இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…
1977ம் வருடம் எம்.ஜி.ஆரின் கட்சி வெற்றி பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பதவியேற்கும் தேதியும் குறிக்கப்பட்டது. அப்போது அவர் ஸ்ரீதரின் இயக்கத்தில் மீனவ நண்பன் என்கிற படத்தில் நடித்துகொண்டிருந்தார். எனவே, ஸ்ரீதரை அழைத்து ‘படத்தை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?’ என எம்.ஜி.ஆர் கேட்க ‘2 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் முடித்துவிடுகிறேன்’ என அவர் சொல்ல எம்.ஜி.ஆர் சம்மதித்தார்.
மீனவ நண்பன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது. காட்சிப்படி கடலில் படகில் சென்று கொட்டும், மழை, இடி, மின்னல்களுக்கு நடுவே நம்பியாருடன் எம்.ஜி.ஆர் சண்டை போட வேண்டும். எம்.ஜி.ஆர் தயாராக இருந்தபோது அவரிடம் வந்த ஸ்ரீதர் ‘மழை எதுவும் வேண்டாம். நீங்கள் சண்டை போடுங்கள். இடி, மின்னல் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்’ என சொல்ல எம்.ஜி.ஆருக்கு புரியவில்லை.
‘இன்னும் சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க போகிறீர்கள். மழையில் நனைந்து காய்ச்சல் வந்துவிட்டால் என்ன செய்வது?’ என அவரின் மீதான அக்கறையை ஸ்ரீதர் சொன்னபோது ‘தொழில் என வந்துவிட்டால் அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். எதைப்பற்றியும் யோசிக்கக் கூடாது’ என சொல்லி மழையில் சண்டை போடுவது போலவே நடித்தார் எம்.ஜி.ஆர்.