திரையுலகில் பாரம்பரிய சினிமா நிறுவனமாக இருப்பது ஏவிஎம் நிறுவனம். 1945ம் வருடம் மெய்யப்ப செட்டியார் இந்த நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்தார். சென்னை வடபழனியில் இருக்கும் ஏவிஎம் உருண்டைதான் சினிமாவின் அடையாளமாக இருந்தது. சிவாஜியின் பராசக்தி படத்தை கூட தயாரித்தது இவர்கள்தான். அதன்பின் சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களையும் வைத்து பல படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆரை வைத்து அன்பே வா படம் தயாரித்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த், பாக்கியராஜ் என பலரும் இவர்களின் தயாரிப்பில் நடித்துள்ளனர். ஒரு திரைப்பட காமெடியில் வடிவேலுவிடம் சினிமாவை கண்டுபிடித்தது யார்? என ஒருவர் கேட்ட ‘மெய்யப்ப செட்டியார்’ என சொல்வார். அந்த அளவுக்கு அந்நிறுவனம் பிரபலம்.

சரி விஷயத்திற்கு வருவோம். ‘அன்பே வா’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது மெய்யப்ப செட்டியாரின் மகன் ஏவிஎம் சரவணன் படப்பிடிப்பில் நொறுக்குத்தீனிகளை சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிகவும் சிறிய வயது என்பதால் நொறுக்குத்தீனி சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த எம்.ஜி.ஆர் ‘தொழிலாளிகளை பார்க்க வைத்துக்கொண்டு இப்படி சாப்பிடக்கூடாது. தனியாக போய் சாப்பிடுங்கள்’ என கூறியுள்ளார். அதன்பின் ஒரு நாள் காலை 11 மணியளவில் சரவணன் மசால் வடையை எம்.ஜி.ஆர் எடுத்து வந்து ‘செட்டில் உள்ள எல்லோரிடமும் கொடுத்துவிட்டேன். நீங்கள் சாப்பிடுங்கள்’ என சொன்னாராம். எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே மேலே காட்டி ‘லைட் பாயை மறந்துவிட்டீர்களே’ என்றாராம். அதன்பின் அவருக்கும் மசால் வடை கொடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் அவரிடம் ‘சரவணா.. நாம் சாப்பிடும்போது அனைவருக்கும் கொடுத்துவிட்டே சாப்பிட வேண்டும். யாரையும் விட்டுவிடக்கூடாது’ என அறிவுரை சொன்னார். அதன்பின் அந்த அறிவுரையை ஏவிஎம் சரவணன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வருகிறாராம். காரில் ஏறினால் கூட டிரைவரிடம் ‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?’ என கேட்டு அதை உறுதி செய்த பின்னரே கிளம்புவாராம்.
