Cinema History
உனக்கு எதுக்கு இந்த வேலை!.. வேற எதாவது ட்ரை பண்ணு!.. கருணாநிதி மகனை எச்சரித்த எம்.ஜி.ஆர்!..
50,60களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் சங்கர் என பல நடிகர்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்தார். அவரின் உடல் மொழியை எந்த நடிகரிடமும் பார்க்கவே முடியாது. அப்போதே சில நடிகர்கள் ஹாலிவுட் நடிகர்களை தங்களின் நடிப்பில் பிரதிபலித்தனர். ஆனால், எம்.ஜி.ஆர் ஒரு புது பாணியை கொண்டு வந்தார்.
அவர் வசனம் பேசும் ஸ்டைலும், வாள் சண்டை போடும் அழகும், நடனமாடும் ஸ்டைலும் எந்த நடிகரிடமும் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர் நடிப்பு பற்றி ஒருமுறை பேசிய சிவாஜி ‘எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். நான் எனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறேன். அவரின் படங்களில் அவர் ஊருக்காக உழைப்பார். என்னுடைய படங்கள் குடும்ப படங்கள். அவருடையை பாணி படங்களில் எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த நடிகர். அந்த பாணி கதைகளில் அவர் பெரிய நடிகர்’ என சொன்னார்.
நண்பர்களாக இருந்து எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் பிரிந்தபின் இருவரும் அரசியல் எதிரிகளாக மாறினார். எம்.ஜி.ஆரின் மீது மக்களுக்கு இருக்கும் புகழை எப்படியாவது குறைக்க வேண்டும் என கலைஞர் பல முயற்சிகளை செய்தார். ஆனால், எல்லாவற்றிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. கலைஞரின் மூத்தமகன் மு.க.முத்துவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வர கலைஞரும் அதற்கு சம்மதித்தார்.
கலைஞரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அஞ்சகம் பிக்சர்ஸ் சார்பில் ‘பிள்ளையோ பிள்ளை’ என்கிற படம் துவங்கப்பட்டது. அப்போது, பல ஹிட் படங்களை கொடுத்த கிருஷ்ணன் – பஞ்சு படத்தை இயக்கினர். இப்படத்தின் துவக்கவிழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர், கிளாப் அடித்து படப்ப்பிடிப்பை துவங்கி வைத்ததோடு, மு.க.முத்துவுக்கு வாழ்த்தும் கூறினார். படம் முடிந்ததும் எம்.ஜி.ஆருகுக் சிறப்புகாட்சி திரையிடப்பட்டது. அதைப்பார்த்து எம்.ஜி.ஆர் அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில், மு.க.முத்து அப்படியே எம்.ஜி.ஆரின் ஸ்டைலையே கடைபிடித்திருந்தார். அவரைப்போலவே உடல் மொழி, அவரை போலவே வசன உச்சரிப்பு என அவரை காப்பி அடித்திருந்தார். தனக்கு எதிராக என்னவோ நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், படம் முடிந்ததும் ‘என்னை போலவே நடித்திருக்கிறாய். அது சரியாக வராது. உனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்துக்கொள். அதுதான் உன்னை ரசிகர்களிடம் கொண்டு செல்லும்’ என அறிவுரை சொல்லிவிட்டு ஒரு கடிகாரத்தை அவருக்கு பரிசளித்து சென்றார்.
ஆனால், மு.க.முத்து அதை செய்யவில்லை. எனவே, ரசிகர்களின் மனதிலும் அவரால் இடம் பிடிக்கமுடியவில்லை. நடிகராகவும் அவரால் வெற்றிபெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..