ஆர்வக்கோளாறில் பாட்டு எழுதிய வாலி!.. ‘அக்கிரமம்’ என திட்டிய எம்.ஜி.ஆர்.. அட அந்த பாட்டா?..
எம்.ஜி.ஆருக்கு ஏற்றார்போல், அதாவது அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இடுவது போல பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. அதனால்தான் எம்.ஜி.ஆருக்கு வாலி எப்போதும் ஃபேவரைட் பாடலாசிரியராக இருந்தார். எம்.ஜி.ஆர் படத்தில் காதல், தத்துவம், சோகம் என பல சூழ்நிலைகளுக்கு வாலி பாடல்களை எழுதியுள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்து 1965ம் வருடம் வெளியான திரைப்படம் எங்க வீட்டு பிள்ளை. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். சரோஜா தேவி, நாகேஷ், தங்கவேல், நம்பியார், சரோஜா தேவி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.
குறிப்பாக எம்.ஜி.ஆர் பாடுவது போல வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்கிற பாடல் அவரை முதலமைச்சராகவே மாற்றிவிட்டது. அந்த அளவுக்கு தன்னை பற்றி தானே புகழ்பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்கு இது போன்ற பல பாடல்களை வாலி எழுதியுள்ளார்.
இந்த பாடலை முதலில் வாலி ‘நான் அரசன் என்றால்.. என் ஆட்சி என்றால்’ என்றுதான் எழுதியிருந்தாராம். இந்த பாடல் வரிகளை பார்த்த தயாரிப்பாளர் ‘இதை சென்சாருக்கு அனுப்புங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்’ என வாலியுடம் சொல்ல அப்படியே அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரி அந்த பாடலில் நிறைய வரிகளை மாற்ற சொல்லியிருக்கிறார். இதையடுத்து பாடலை மொத்தமாகவே மாற்றிவிடுவோம் என வாலியிடம் தயாரிப்பாளர் கூறிவிட்டார். அந்த பாடல் வரிகளை வாலி எம்.ஜி.ஆரிடம் காட்ட எம்.ஜி.ஆரோ ‘அக்கிரமம்’ என்றாராம்.
அதற்கு வாலி ‘ஆமாண்ணே. நம்ம பாட்டுன்னாலே இப்படித்தான் பன்றாங்க’ என்றாராம். அதற்கு எம்.ஜி.ஆர் ‘நான் அதை சொல்லல. நீர் எழுதின பாட்டு வரியை சொன்னேன். எதையும் இலைமறைவு காய் மறைவா சொல்லணும். இப்படி தேங்காய் உடைப்பது போல் சொல்லக்கூடாது’ என சொன்னாராம். அதன் பின்னர்தான் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என வாலி எழுதியுள்ளார். அதேபோல், காக்கைகள் கூட்டம் எழுதியிருந்ததை எம்.ஜி.ஆர் ‘காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்’ என மாற்ற சொன்னாராம்.
இப்படித்தான் அந்த சூப்பர் ஹிட் உருவாகியிருக்கிறது.