ஆசையாக சென்ற அசோகன்!.. ரசிகனாக பார்க்க வந்தவரிடம் எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் எஸ்.ஏ.அசோகன். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று அனைவரையும் மிரள வைத்தவர். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் இயல்பாகவே எம்ஜிஆரின் ஒரு தீவிர ரசிகரும் ஆவார்.
அந்தக் காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அசோகனும் ஆவார். ஜெய்சங்கர் மற்றும் அசோகன் இருவரும் தான் பட்டப்படிப்பை முடித்து நடிக்க வந்தவர்கள். படிப்பை முடித்து ராமண்ணாவிடம் சேர்ந்தார். இவர் தான் அசோகனை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர்.
முதன் முதலில் ‘ஔவையார்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் கப்பலோட்டிய தமிழன் என்ற படத்தில் ‘ஆஷ் துரை’ யாக நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அசோகன் ஒரு படப்பிடிப்பிற்காக கலந்து கொண்டிருந்த போது பக்கத்து படப்பிடிப்பில் எம்ஜிஆர் இருந்தாராம்.
உடனே எம்ஜிஆரை பார்த்து ‘உங்களுடைய பரம ரசிகன் நான். உங்களை சந்திக்க நாளை வீட்டிற்கு வரலாமா?’ என்று கேட்டுள்ளார். எம்ஜிஆரும் ‘தாராளமாக வாருங்கள்’ என்று சொல்லிவிட்டாராம். சொன்னப் படி அடையாறில் இருந்த எம்ஜிஆர் வீட்டிற்கு அசோகன் செல்ல தீவிர உடற்பயிற்சியில் இருந்த எம்ஜிஆர் அப்படியே வந்த அசோகனை வரவழைத்தாராம்.
எம்ஜிஆரின் அந்த கட்டுமஸ்தான உடம்பை பார்த்து அசோகனும் மெய்சிலிர்த்து விட்டாராம். பேசிக் கொண்டிருந்த போது அசோகனுக்கு எம்ஜிஆர் 'உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல் தன் பெரும்பாலான படங்களில் அசோகன் நடிக்க பெரும் உதவிகளை செய்தார்.
அன்றிலிருந்து அசோகன் இல்லாத எம்ஜிஆர் படங்களை காண்பது என்பது அரிதாகிவிட்டது. பல வெற்றிப் படங்களில் சேர்ந்து நடித்த அசோகன் பின்னாளில் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. படங்களில் இவரது குரலின் தொனியும், வசனங்களை இவர் உச்சரித்த பாணியும் இவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.
இதையும் படிங்க : என்.எஸ்.கே சொன்னதை கேட்டு அரண்டு போன ஜெமினி ஸ்டூடியோ… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?..