ஜெய்சங்கருடன் கிசுகிசுக்கப்பட்ட நடன நடிகை!..எம்ஜிஆர் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?..
60 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெய்சங்கர். ‘இரவும் பகலும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெய்சங்கர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தவர் மக்களால் மக்கள் தமிழன் என்றும் மக்கள் கலைஞர் என்றும் போற்றப்பட்டார்.
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
மேலும் நடிகர் ஜெய்சங்கரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றே அழைக்கத் தொடங்கினர். ஏனெனில் இவர் நடித்த ‘வல்லவன் ஒருவன் ’ மற்றும் ‘சிஐடி சங்கர்’ போன்ற படங்களில் ஒரு துப்பறியும் போலீஸாக நடித்து அசத்தியிருப்பார். அதன் காரணமாகவே இவரை ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கத்தொடங்கினர்.
புதுமையை புகுத்தியவர்
ஆரம்பகாலங்களில் மூவேந்தர்களாக சினிமாவை ஆண்டு கொண்டிருந்தவர்கள் நடிகர் சிவாஜி, நடிகர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் ஜெமினிகணேசன். இவர்களை தாண்டி 1960 ல் ஒரு மாடர்ன் நடிகராகவும் அந்த காலங்களில் ஜொலிக்க முடியும் என காட்டியவர் நடிகர் ஜெய்சங்கர். மேலும் எந்த ஒரு தொழில்நுட்ப கலைஞர்களை பார்த்தாலும் ‘hi’ சொல்ற பழக்கத்தை கொண்டு வந்தவர் இவர் தான் என்று பல பிரபலங்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் இவர் இறப்பின் போது கூடி ஒரு பத்திரிக்கையில் இனி யார் hi சொல்வார் என்று தலைப்பாக போட்டு வெளிவந்தது.
மேலும் சிவாஜி, எம்ஜிஆர் படப்பிடிப்பின் போது மயான அமைதியே நிலவி வரும் நிலையில் அதுவும் யார் அவர்களை பார்க்க போனாலும் அனுமதி பெற்று தான் உள்ளே நுழைய முடியும். ஆனால் அந்த பழக்கத்தை மாற்றியவர் ஜெய்சங்கர். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் தன்னை வந்து சந்திக்கலாம் என்று கூறியவர்.
நடிகையுடன் கிசுகிசு
ஜெய்சங்கரை வெள்ளிவிழா நாயகன் என்றே அழைப்பார்கள். வாரவாரம் வெள்ளிக்கிழமைகளில் இவரின் படம் கண்டிப்பாக வெளிவரும். பெரிய வசூல் மன்னனாக இல்லாவிட்டாலும் குறைந்த அளவு லாபத்தை பெற்று தரக்கூடிய நாயகனாகவே திகழ்ந்தார். இவரால் எந்த தயாரிப்பாளருக்கும் இதுவரை நட்டம் வந்ததில்லை என்று இவரின் நெருங்கிய நண்பர் கூறினார்.
இதையும் படிங்க : சிம்பு நடித்த மாஸ் ஹிட் பாடலை எழுதிய அந்த இயக்குனர்… யாருடன் உட்கார்ந்து எழுதினார் தெரியுமா?
இப்படி தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜெய்சங்கரை ஒரு நடிகையுடன் அப்பொழுது உள்ள ஒரு பத்திரிக்கை இணைத்து பேசி செய்தி வெளியிட்டிருக்கிறது. நடனத்தில் கைதேர்ந்த அந்த நடிகையுடன் ஜெய்சங்கர் ஏகப்பட்ட படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளார். அதனாலேயே அவர்களின் நெருக்கத்தை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டது.
எம்ஜிஆர் அறிவுரை
ஜெய்சங்கரின் கிசுகிசுவை அறிந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெய்சங்கரை அழைத்து ‘சங்கர், எவ்ளோ சீக்கிரம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமோ செய்து கொள்’ என்று கூறினாராம். ஆனால் ஜெய்சங்கர் ‘அந்த மாதிரி எண்ணம் எங்களுக்குள் இல்லை ’ என்று பதில் கூற ‘அப்படி என்றால் இந்த வதந்திக்கு சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வை’ என்று எம்ஜிஆர் கூறியதும் அடுத்த வருடமே பெற்றோர்கள் பார்த்த கீதா என்ற பெண்ணை மணந்திருக்கிறார் ஜெய்சங்கர் என்று பழம்பெரும் கதாசிரியர் கலைஞானம் தெரிவித்தார்.