எம்ஜிஆருக்குக் கிடைக்க வேண்டிய பட்டத்தை பெற்ற சிவாஜி...இவ்ளோ விஷயம் அப்பவே நடந்திருக்கா...?
தமிழ்சினிமா உலகில் இரு பெரும் ஜாம்பவான்கள் யார் என்றால் அது புரட்சித்தலைவரும், நடிகர் திலகமும் தான். நம்ம அப்பா, தாத்தா காலத்தில் இருவரும் வெற்றி நடைபோட்டார்கள்.
80ஸ், 90ஸ் கிட்ஸ்கும் இவர்களைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். ரஜினி கமலுக்கு முன் இவர்கள் தான் தமிழ்சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தனர். யார் சிவாஜி, யார் எம்ஜிஆர் என சிறு குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்லி விடும். இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் உண்டு.
அவர்களுக்குள் சினிமா உலகில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ரசிகர்களிடையே கருத்து மோதல்களும் உண்டு. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சிவாஜி என்ற பெயர் நடிகர் திலகத்துக்கு எப்படி கிடைத்தது என்பது. அது ஒரு சுவாரசியமான விஷயம். பார்க்கலாமா...!
1949ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி படத்தில் எம்ஜிஆருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. எஸ்.ஏ.நடராஜன், மாதுரிதேவி உள்பட பலர் நடித்த படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட்டானது. எம்ஜிஆரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது.
அதே ஆண்டில் திராவிடக் கழகத்தில் இருந்து பிரிந்து திமுகவைத் தொடங்கினார் அறிஞர் அண்ணா. அந்தக் காலத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணாவின் பேச்சால் வெகுவாகக் கவரப்பட்டனர்.
சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் கொண்ட வேலைக்காரி, சந்திரகாந்தா ஆகிய நாடகங்களை எழுதினார். அதோடு மட்டும் நின்று விடாமல் அவற்றில் தானே நடித்துப் பகுத்தறிவு பிரசாரமும் செய்தார்.
திராவிட இன உணர்வு, தமிழ்ப்பற்று, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகிய லட்சியங்களை மையமாகக் கொண்டு அண்ணா எழுதிய எழுத்தும், பேச்சும் பெரும் புரட்சியை உண்டாக்கின.
அப்போது தான் எம்ஜிஆருக்கு அண்ணா உடன் தொடர்பு ஏற்பட்டது. 1952 ம் ஆண்டில் தான் அண்ணாவை எம்ஜிஆர் சந்தித்தார். நடிகர் டி.வி. நாராயணசாமி தான் அண்ணாவிடம் எம்ஜிஆரையே அறிமுகப்படுத்தினார்.
அப்போது திரை உலகில் முன்னணிக் கதாநாயகனாக எம்ஜிஆர் நட்சத்திரமாக மின்னிக் கொண்டு இருந்தார். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தை அண்ணா எழுதினார்.
அதற்கு ஒரு நல்ல நடிகர் அவருக்குத் தேவைப்பட்டது. அண்ணா எம்ஜிஆரை நடிக்கும்படி கூறினார். எம்ஜிஆரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அந்த நாடகத்தில் சில காரணங்களால் எம்ஜிஆரால் நடிக்க இயலாமல் போய்விட்டது. கணேசனுக்கு அந்த வாய்ப்பு போனது. அவர் நடித்ததால் சிவாஜி என்ற பட்டத்தைப் பெற்றார்.
அண்ணாவின் நாடகத்தில் நடிக்க முடியாமல் போனாலும் அவரது பாசத்திலிருந்து எம்ஜிஆரால் விடுபட முடியவில்லை. 1953ல் எம்ஜிஆர் திமுகவில் சேர்ந்தார். அண்ணாவின் கட்சி வளர்ச்சிக்கு எம்ஜிஆர் பெரிதும் உதவியாக இருந்தார்.
அந்த வேளையில் தான் அண்ணா கதை வசனம் எழுதிய தாய் மகளுக்குக் கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் ஆகிய படங்களில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.