உடன் வந்தோர் சாப்பிட்டார்களா என்பதை அறிய எம்ஜிஆர் நடத்திய தடாலடி சோதனை
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் அணையா அடுப்பு உள்ளது. இது 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கும். அங்கு சென்றால் யார் வேணும் என்றாலும் எப்போது வேண்டுமானாலும் பசியாற சாப்பிடலாம். மக்கள் திலகத்தை சந்திக்க வரும் அனைவரிடத்திலும் அவர் கேட்கின்ற முதல் கேள்வி நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா என்பது தான்.
அவருடன் பணியாற்றும் அனைவருமே அது கார் ஓட்டுநராக இருந்தாலும் சரி...சுற்றுப்பயணத்தில் உடன் இருப்பவர்களாக இருந்தாலும் சரி...சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு விட்டார்கள் என்பது தெரிந்ததும் தான் தனது அடுத்த நிகழ்வுக்கே செல்வார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த கற்பூர பாண்டியன் எம்ஜிஆர் உடனான ஒரு நிகழ்வை இப்படி பகிர்கிறார்.
நான் கலெக்டராக இருந்த நேரத்தில் ஒருமுறை சிவகங்கை மாவட்ட விருந்தினர் மாளிகையில் எம்ஜிஆர் தங்கினார். அப்போது மதிய உணவை முடித்து விட்டு இன்னொரு நிகழ்வில் அவர் பங்கேற்க வேண்டும். அவர் புறப்படலாம் என்று கிளம்பத் தயாராகிறார்.
அப்போது நான் ஐயா கீழே சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்சம் பேர் சாப்பிடணும்னு சொல்றாரு. உடனே அடட அடடா எல்லோருமே சாப்பிட்டு முடிந்தவுடன் சொல்லுங்கள் என்று அமர்ந்து விடுகிறார். அடுத்து 25 நிமிடங்களில் ஐயா புறப்படலாம் எல்லாருமே சாப்பிட்டுட்டாங்க என்கிறார்.
எல்லாருமே சாப்பிட்டுட்டாங்களா எனறு கேட்கிறார். உடனே தனது காரில் ஏறுகிறார். சற்று தாமதித்;துவிட்டு முதல் காரில் உள்ள ஓட்டுநர் மற்றும் காவலர்களை நீங்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் அங்கு என்னென்ன சாப்பிட்டீங்கன்னு சொல்கிறார். அங்கு வைக்கப்பட்ட பதார்த்தங்களை சொன்னவுடன் சரி என்கிறார்.
அப்படியும் அவரது சந்தேகம் தீரவில்லை. எங்க கையைக் கொடுங்க என்று சொல்லிவிட்டு அங்குள்ள ஓட்டுனரின் கையை முகர்ந்து பார்க்கிறார். அப்படி என்றால் அவருடைய தாய் உள்ளம் எப்படிப்பட்டது என்று சிந்தித்துப் பாருங்கள்.
அவசரத்தில் முதலமைச்சரது விழா இருக்கிறது என்று சாப்பிடாமல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் அவர் இப்படி செய்துள்ளார். சிலர் சாப்பிடாமலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொல்லிவிடுவார்கள் என்பதற்காகத் தான் எம்ஜிஆர் இப்படி ஒரு சோதனையை நடத்தினார்.
இதேபோல ஒருமுறை கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கிருந்த நிர்வாகி ஒருவர் அண்ணே...இன்னைக்கு நம்ம வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டு வர்ரேன்னு சொல்றாரு. எம்ஜிஆருடன் அதிகாரிகள், காவலர்கள், உதவியாளர்கள் என 30 பேர் உள்ளனர். மதிய உணவு தயார்.
சாப்பிடலாம் என நிர்வாகி சொன்னதும் 2 கேரியர் மட்டும் கொண்டு வருகிறார். எவ்வளவு பேர் சாப்பிடலாம் என கேட்கிறார். அண்ணே ஒரு நாலஞ்சு பேர் சாப்பிடலாம் என்கிறார். இதை அப்படியே மூடி இதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போ. நான் வந்து சாப்பிடுறேன் என்கிறார்.
வழக்கமாக கோவை மாநகர் சென்றால் ஒரு உணவு விடுதியை நடத்தக்கூடிய குடும்பம். அந்தக்குடும்பத் தலைவிக்கு போனில் சொல்கிறார். ஒரு அரை மணி நேரத்தில் அங்கு வருவோம். 30 பேருக்கு உணவு தயார் செய்யுங்கள் என்கிறார். தகவல் கிடைத்ததும் அனைவருடனும் சென்று அங்கு உணவருந்துகிறார்.
உதவியாளர்கள், காவலர்கள் என அனைவரையும் ஒரே பந்தியில் அமர்த்தி வயிறார சாப்பிட்டு அவர்களது பசியைத் தணிக்கிறார் எம்ஜிஆர். அதுதான் புரட்சித்தலைவர். அவர் தான் பொன்மனச் செம்மல்.
மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கக் காரணமே அந்த தாயுள்ளம் தான். வேறு எவரும் இனியும் இப்படிப்பட்ட அற்புதமான மனிதராக அவதாரம் எடுக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.