புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்க இதுதான் காரணம்...!
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..." என்ற வரிகளை நிஜமாக்கியவர்.
" மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்...!"
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...?"
இதற்கு மேலும் இவரைப் பற்றி சொல்லவும் வேண்டுமா...அவர் தான் புரட்சித்தலைவர்.. பொன்மனச்செம்மல்...மக்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்த உத்தமர்.
எம்ஜிஆரின் சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக இருந்தது. மனிதாபினமானம் தான் பிரதான காரணம். அதுதான் மக்களின் மனதில் அவருக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்தது. சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிவாகை சூடினார்.
மக்களை நேசித்தார் எம்ஜிஆர். திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தீய பழக்கங்களை நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிக்காத உத்தமர்.
சிறுவயதின் வறுமை அவரை பிற்காலத்தில் வாரி வழங்கும் வள்ளலாக்கியது. ஏழைகளின் துயர் துடைக்கக் காரணமானது. கிடைக்காத கல்வியை அனைவருக்கும் தனது காலத்தில் கிடைக்கச் செய்தார்.
எம்ஜிஆர் என்ற அந்த மாபெரும் புரட்சித்தலைவர் செய்த அனைத்து மக்கள் நலப்பணிகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது அவருடைய வறுமை தான்.
மறைந்து 35 ஆண்டுகள் ஆனபோதும் அவரைப் பற்றி இன்றும் மக்கள் சிலாகித்துப் பேசுவதைக் காணலாம்.
ஏழைகளை அருகில் இருந்து ஒரு அன்னையாகக் கவனித்துக் கொண்டார். எட்டத்தில் இருந்து அவர்களை வெறுமனே பார்த்து விட்டுச் செல்லவில்லை. உடனடியாக உதவி செய்யும் உத்தம வள்ளல் இவர்.
வாழ்நாள் முழுவதும் வள்ளலாக நடிக்க முடியாது. அதே போல வருமானம் இல்லாத போதும் கையில் இருந்ததை அடுத்தவருக்குக் கொடுத்தவர் தான் புரட்சித்தலைவர். அதனால்தான் மக்கள் அவரை பொன்மனச் செம்மல் என்கின்றனர்.
வருமானம் வரட்டும் தருகிறேன் என்று சொல்லி சமாளிப்பவர் அல்ல அவர். ஏழையின் முகத்தில் வாட்டத்தைக் கண்டவுடனே கொடுக்கும் கொடை வள்ளல் தான் அவர் என்கின்றனர் ஏழைமக்கள்.
எதையும் எதிர்பார்த்து செய்யமாட்டார். அதாவது பிரதிபலன் கருதாமல் உதவி செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இதை வார்த்தைகளுக்கு வேண்டுமானால் அலங்காரமாக கோர்க்கலாம். ஆனால் அதை நிஜமாக்கியவர் தான் எம்ஜிஆர். இவரது வாழ்க்கையில் தோல்வி என்பது கடைசி வரை இல்லை.
மக்களை விட்டு இவர் கடைசி வரை நீங்கியது இல்லை. அதனால் தான் மக்களும் அவரை விட்டு அவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆனபோதும் அவர் நினைவை விட்டு பிரியவில்லை.
எம்ஜிஆர் இல்லத்திற்கு மனுவுடன் சென்றால் அவர்களின் பசியைத் தீர்த்த பிறகே மனுவைப் பெற்றுக் கொள்வார். அவர் இருக்கும் வரை ராமாபுரத்தில் அணையா அடுப்பாக இருந்தது.
சாமானிய மக்களின் மனதில் குடியிருந்து அவர்களின் துயரைத் துடைக்கும் தலைவரை மக்கள் ஒரு போதும் மறந்ததில்லை. ரிக்ஷாக்காரன் படத்தில் எம்ஜிஆர் நடித்தார். அவர்கள் மழையில் வாடுவதை நினைத்து சொந்த செலவில் மழைக்கோட்டை வாங்கிக் கொடுத்தார்.
ஏழை விவசாயி, கூலித்தொழிலாளர், எளிய மக்களுக்கு நன்மைகள் பல செய்தார். அதைத் திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் முதல்வரான பிறகு செய்தார். அதனால் தான் சரித்திரத்திலும் இடம்பெற்றார். மக்கள் மனதிலும் நீங்கா இடம்பெற்றார்.
இளமையில் வறுமை. கல்வி அவருக்குக் கிடைக்கவில்லை. பசிக்கொடுமை. இது மற்றவருக்கு வரக்கூடாது என்றதற்காகத் தான் பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவர் எவ்வித பட்டமும் பெறவில்லை. ஆனால் கற்றவர் சபைதனில் அவருக்குத் தனி இடம் கிடைத்தது.
இன்னும் எத்தனை காலமானாலும் அவருடைய தத்துவ பாடல்கள் போல எந்தக் காலத்திலும் பாடல்கள் வர முடியாது. இவர் நம்மை விட்டு மறைந்தாலும் இவரது பாடல்கள் நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.