ஒரே கதைக்குச் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்-சிவாஜி… கடைசியில் நடந்ததுதான் டிவிஸ்ட்!!

MGR and Sivaji
1958 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் “உத்தம புத்திரன்”. இத்திரைப்படத்தை டி.பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். “வீன்ஸ் பிக்சர்ஸ்” நிறுவனம் சார்பாக இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.கோவிந்தராஜன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.

Uthama Puthiran
இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது இதே “உத்தமபுத்திரன்” கதையில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. அப்போதுள்ள பத்திரிக்கைகளில் ஒரு பக்கத்தில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடிக்கும் “உத்தமபுத்திரன்” என்று விளம்பரம் வந்தபோது, இன்னொரு பக்கத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடிக்கும் “உத்தமபுத்திரன்” என்று விளம்பரம் வந்தது. இந்த விவகாரம் கடைசியில் எப்படி? யார் மூலம்? முடிவுக்கு வந்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

MGR
ஒரு நாள் இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், தான் சிறுவயதில் படித்திருந்த “தி மேன் இன் தி ஐயர்ன் மாஸ்க்” என்ற ஆங்கில கதையை திரைப்படமாக உருவாக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால் அந்த கதை ஏற்கனவே 1940 ஆம் ஆண்டு “உத்தமபுத்திரன்” என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வெளிவந்திருந்தது. எனினும் அத்திரைப்படத்தை மீண்டும் சில மாறுதல்கள் செய்து திரைப்படமாக உருவாக்கலாம் என முடிவு செய்தார் ஸ்ரீதர்.

C.V.Sridhar
மேலும் இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்தால் சிறப்பாக இருக்குமே என்றும் நினைத்தார் ஸ்ரீதர். அதன்படி ஒரு நாள் சி.வி.ஸ்ரீதர், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.கோவிந்தராஜன் ஆகியோர் சிவாஜியின் வீட்டிற்குச் சென்றனர்.
“உத்தமபுத்திரன் கதையை மீண்டும் தயாரிப்பதாக இருக்கிறோம். நீங்கள் அதில் இரட்டை வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்” என கூறினார்கள். சிவாஜி கணேசனும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பின் “மனிதன்”, “தாய் உள்ளம்”, “விடுதலை” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய ராம்நாத் இத்திரைப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்த ஸ்ரீதர், தனது சகாக்களுடன் ராம்நாத்தின் வீட்டிற்குச் சென்றார்.

K Ramnoth
“தி மேன் இன் தி ஐயர்ன் மாஸ்க் கதையை திரைப்படமாக தயாரிக்க உள்ளோம். சிவாஜி இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நீங்கள்தான் இத்திரைப்படத்தை இயக்கித் தரவேண்டும்” என ராம்நாத்திடம் கூறினார்கள். அதற்கு ராம்நாத் பலமாக சிரித்தாராம். அவர் ஏன் இப்படி சிரிக்கிறார்? என்பது புரியாமல் நின்றுகொண்டிருந்தனர் அவர்கள்.

MGR
அதன் பின் அவர்களிடம் பேசத்தொடங்கிய ராம்நாத் “இதே கதையை வேறு ஒரு நடிகர் நடிக்கிறார். அத்திரைப்படத்தை இயக்க சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஒப்புக்கொண்டேன்” என கூறினாராம். இதை கேட்டதும் யார் அந்த நடிகர் என ஸ்ரீதர் கேட்க “எம்.ஜி.ஆர்” என கூறினாராம் ராம்நாத். இதை கேட்டவுடன் ஸ்ரீதரும் அவரின் சகாக்களும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
அதன் பின் ஸ்ரீதரும் அவரது சகாக்களும் ராம்நாத்தின் வீட்டில் இருந்து வெளியேறினர். சிறிது நேரம் யோசித்த ஸ்ரீதர் தனது சகாக்களிடம் “நாம் உத்தமபுத்திரன் கதையை நிச்சயமாக சிவாஜியை வைத்து எடுக்கத்தான்போகிறோம்” என கூறினாராம்.

C.V.Sridhar
இதை கேட்ட சகாக்கள் “எம்.ஜி.ஆருடன் சிவாஜியை மோதவைப்பதா? அதுவும் ஒரே கதைக்காக?” என கூறி ஸ்ரீதரின் திட்டத்தை மறுத்தனர். அதற்கு ஸ்ரீதர் “இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். 1940 ஆம் ஆண்டு வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸிடம் இருந்து நாம் உரிமையும் வாங்கியிருக்கிறோம். அதன் பின் நாம் ஏன் இந்த முயற்சியை கைவிடவேண்டும்? அவர்கள் எம்.ஜி.ஆரை வைத்து எடுக்கிறார்கள் என்றால் நாம் சிவாஜியை வைத்து எடுப்போம். இரண்டில் எந்த படம் நன்றாக இருக்கிறதோ அந்த படம் ஓடட்டும்” என கூறினாராம்.
எனினும் ஸ்ரீதரின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக அவரது சகாக்களான எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.கோவிந்தராஜன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டனராம். அதன் பின் “சிவாஜி இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்” என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க தொடங்கினார் ஸ்ரீதர். அதே போல் நாளிதழ்களில் ஒரு பக்கம் “எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்” எனவும் விளம்பரங்கள் வந்தது.

Sivaji Ganesan
இந்த விவகாரம் இப்படி போய்க்கொண்டிருக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து “ஸ்ரீதரும் அவரது சகாக்களும் ஏற்கனவே மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து உத்தமபுத்திரன் திரைப்படத்தின் உரிமையை பெற்றுவிட்டனர். ஏன் தேவையில்லாமல் அவர்களுடன் மோதிக்கொண்டிருக்கிறாய். இந்த கதையை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு கதையை எடு” என அறிவுரை கூறினாராம்.

Kalaivanar
என்.எஸ்.கிருஷ்ணனின் மேல் எப்போதும் தனி மரியாதை வைத்திருப்பவர் எம்.ஜி.ஆர். ஆதலால் என்.எஸ்.கே. கூறிய அறிவுரைக்கு சரி என தலையாட்டினாராம் எம்.ஜி.ஆர். அதனை தொடர்ந்துதான் எம்.ஜி.ஆர் “உத்தமபுத்திரன்” கதையை கைவிட்டாராம். அதன் பின் சிவாஜியின் “உத்தமபுத்திரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரையரங்குகளில் வெளியாகி அத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.