உன் அக்கிரமம் தாங்கமுடியலய்யா- வாலியை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்…
எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்க காலகட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் கலைஞருடன் இணைந்து பயணித்துக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் திமுகவுக்கு ஆதரவாக, அதனை மறைமுகமாக பிரச்சாரம் செய்யும் போக்கு இருந்ததது.
அதாவது அச்சமயத்தில் எம்.ஜி.ஆர், தனது திரைப்படங்களில் அதிகமாக கருப்பு, சிவப்பு சட்டைகளிலேயே வலம் வருவார். அதே போல் அவரது திரைப்படத்தின் பாடல்களில் கூட மறைமுகமாக திமுக ஆதரவு வரிகள் இடம்பெறும்.
திமுக ஆதரவு
உதாரணத்திற்கு, “புதிய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே”, “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” போன்ற பல வரிகளை கூறலாம். இந்த நிலையில் வாலி, எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடலுக்கு சென்சார் போர்டு பிரச்சனை எழுந்தது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ஆணையிட்டால்” என்ற பாடல், எம்.ஜி.ஆர் பாடல்களில் மிகவும் பிரபலமான பாடலாகும். சாட்டையை மிகவும் ஸ்டைலாக சுழற்றி சுழற்றி எம்.ஜி.ஆர் பாடும் பாணி மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
முட்டுக்கட்டை போட்ட சென்சார் போர்டு
இந்த பாடலை எழுதிய வாலி, முதலில் “நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால், இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்” என்று எழுதியிருந்தாராம். எம்.ஜி.ஆரிடம் கூறாமலே அந்த பாடலை பதிவும் செய்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
ஆதலால் சென்சார் போர்டில் அந்த வரிகளை தூக்க சொல்லிவிட்டார்களாம். இதனை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், வாலியை அழைத்து “இதெல்லாம் ரொம்ப அக்கிரமம் வாலி” என கூறியிருக்கிறார். அதற்கு வாலி, “ஆமாங்கய்யா, சென்சார் ரொம்ப அக்கிரமம் பண்றாங்க” என்று கூறியிருக்கிறார்.
“சென்சாரை சொல்லவில்லை. உன்னைத்தான் சொல்கிறேன்” என வாலியிடம் கூறிய எம்.ஜி.ஆர், “இப்படி பாட்டெழுதுனா எப்படி சென்சார்ல அனுமதிப்பாங்க” என திட்டினாராம். அதற்கு பிறகுதான் “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்” என்று அந்த வரிகளை மாற்றியமைத்தாராம் வாலி.