எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய முதல் பரிசு இதுதானாம்… அப்படி அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா??
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என பல்வேறு பெயர்களால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராகவும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த தலைவராகவும் திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இவ்வாறு மக்கள் செல்வாக்கு பெற்ற எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் ஒரு பரிசை கேட்டு வாங்கிய சம்பவத்தை குறித்தும் , அப்படி அந்த பரிசில் என்ன சிறப்பு என்பதை குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1940களில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்ந்தவர் திருச்சி சௌந்தர்ராஜன். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றத் தொடங்கி இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், தன்னுடன் பணியாற்றிய பலருக்கும் ஒரு விலை உயர்ந்த பேனாவை பரிசளித்தாராம்.
அப்போது ஒரு பேனாவை தன்னுடன் பணியாற்றிய நடேசன் என்பவருக்கு கொடுக்கச்சொல்லி தனது மகளை அனுப்பினாராம் சௌந்தர்ராஜன். அப்போது நடேசனுக்கு அருகில் எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாமல் படுத்துக்கிடந்தாராம்.
அப்போது அவரின் மகள் நடேசனிடம் “எனது தந்தை தமிழ் சினிமாவில் பணியாற்ற வந்து 25 ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பேனாக்களை பரிசாக வழங்கி வருகிறார். ஆதலால் உங்களுக்கும் கொடுக்க சொன்னார்” என்ற விவரத்தை சொல்லிவிட்டு அந்த பேனாவை கொடுத்தார்.
அப்போது அருகில் படுத்திருந்த எம்.ஜி.ஆர் அந்த பெண்ணிடம் “எனக்கு பரிசு கிடையாதா?” என்று கேட்டாராம். அதற்கு அப்பெண் “நீங்க எங்க அப்பாகிட்ட வேலை செஞ்சிருக்கீங்களா?” என்று கேட்க அதற்கு எம்.ஜி.ஆர் “உனது அப்பா தயாரித்த பைத்தியக்காரன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றாராம்.
இந்த விஷயத்தை சௌந்தர்ராஜனிடம் அப்பெண் கூற அதற்கு அடுத்த நாளே எம்.ஜி.ஆருக்கு ஒரு பேனா பரிசாக கிடைத்தது. இத்தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்த பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் “எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு இதுவாகத்தான் இருக்கும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.