எப்படி இருந்தாலும் நான் போவேன்!. எஸ்.எஸ்.ஆர் வீட்டு நிகழ்ச்சிக்கு அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. காரணம் இதுதான்!..
50,60 களில் நடிகர்களெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் எல்லோரின் படமும் ஓட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. யாரின் காலையும் யாரும் வார ஆசைப்பட மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் திரையில் பெரிய போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவருமே நிஜ வாழ்வில் அண்ணன் - தம்பி பாசத்துடன் பழகி வந்ததுதான் வரலாறு.
40,50களில் சினிமாவுக்கு வந்த பெரும்பாலான நடிகர்கள் நாடகங்களிலிருந்து வந்தவர்கள்தான். எம்.ஜி.ஆர்,சிவாஜி,நம்பியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், பாலையா போன்ற பெரும்பாலான நடிகர்கள் நாடகங்களில் இருந்து வந்தவர்கள்தான். ஒரே நாடக குழுவில் வேலை செய்ததால் அவர்களுக்குள் நல்ல நட்புறவு இருந்தது. அதேபோல், வெவ்வேறு நாடக குழுவில் இருந்தாலும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நல்ல நட்புறவுடன் பழகி வந்தனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்த மற்றொரு சிறந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். சுருக்கமாக எஸ்.எஸ்.ஆர். என இவரை அழைப்பார்கள். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரின் தமிழ் உச்சரிப்பு அற்புதமாக இருக்கும். குறிப்பாக கலைஞரின் வசனங்களை சிறப்பாக பேசி நடித்த நடிகர்களில் எஸ்.எஸ்.ஆர் முக்கியமானவர். சிவாஜியின் பல படங்களில் இவரும் முக்கிய வேடங்களில் நடித்தவர்.
இவர் அனைத்து நடிகர்களுடனும் நட்புடன் பழகியவர். இவர் புதிதாக ஒரு வீட்டை கட்டி அதன் கிரஹப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு சென்றார். அப்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர் ரவீந்தர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி ஆகியோர் இருந்தனர். எஸ்.எஸ்.ஆரை வரவேற்ற எம்.ஜி.ஆர் அவரை சாப்பிட அழைத்து சென்றுவிட்டார்.
அப்போது ரவீந்தர் பத்திரிக்கையை படித்து பார்த்தார். அதில் எம்.ஜி.ஆரின் பெயர் இல்லை. எஸ்.எஸ்.ஆர் அங்கிருந்து சென்றதும் எம்.ஜி.ஆரிடம் ‘பத்திரிக்கையில் உங்கள் பெயர் இல்லை’ என சொன்னார். அதேபோல், ஜானகியும் பத்திரிக்கையை படித்துபார்த்துவிட்டு ‘பத்திரிக்கையில் உங்கள் பேர் இல்லை. தலைமை, முன்னிலை, வாழ்த்துரை என எல்லா இடத்திலும் திமுக தலைவர்களின் பெயரே இருக்கிறது’ என சொன்னார்.
உடனே எம்.ஜி.ஆர் ‘பத்திரிக்கையில் என் பெயர் இல்லை என்றாலும் பரவாயில்லை. அவர் எனக்கு தம்பி போன்றவர். அவருக்காகவும், அவரின் அம்மாவுக்காகவும் இந்த விழாவுக்கு நான் போவேன்’ என்றார். அதன்பின் பத்திரிக்கையை வாங்கி எம்.ஜி.ஆர் படித்து பார்த்தார். உறவுக்காரர்களின் பெயர்கள் இருந்த இடத்தில் அண்ணன்கள் என்கிற வரிசையில் எம்.ஜி.ஆரின் பெயர் முதலிடத்தில் இருந்தது. தன்னை சொந்த அண்ணனாக நினைத்த எஸ்.எஸ்.ஆருக்கு வீட்டுக்கு தேவையான டேபிள், ஷோபா உள்ளிட்ட பொருட்களுடன் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.