திடீரென அழைத்த எம்.ஜி.ஆர்.. பை நிறைய பணம்.. நெகிழ்ந்து போன எம்.எஸ்.வி...
திரையுலகில் 50,60 களில் திரையுலகை தனது இசையால் கட்டிப்போட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரும், ராமமூர்த்தியும் இணைந்து பல படங்களுக்குஇசையமைத்தனர். இவர்கள் இருவரின் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மட்டுமில்லமால் அப்போது முன்னணியில் நடித்து கொண்டிருந்த எல்லா நடிகர்களுக்கும் இசையமைத்தனர். இவர்களின் இசையில் அற்புதமான பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதனால்தான் எம்.எஸ்.வி மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படம் 1973ம் வருடம் வெளியானது. இந்த படத்திற்கும் எம்.எஸ்.விஸ்வநாதனே இசையமைத்தார். இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. அனைத்து பாடல்களுமே ரம்மியமாக, நேர்த்தியாக இருந்தது. ஏனெனில், இந்த படத்தின் பாடலுக்காக எம்.எஸ்.வியை எம்.ஜி.ஆர் பெண்டு கழட்டியிருந்தார்.
இந்த படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது சென்னை மாம்பழம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் அலுவலகத்திற்கு வரும்படி எம்.எஸ்.விக்கு அழைப்பு வந்தது. அவரும் அங்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆரும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வாங்கி வினியோகம் செய்யும் வினியோகஸ்தர்களும் இருந்தார்கள். எம்.எஸ்.விக்கு ஆள் உயர மாலையை வினியோகஸ்தர்கள் அணிவித்தார்கள். அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதன்பின் எம்.ஜி.ஆர் அவரிடம் ‘விசு சார் தனது திறமையில் இன்னும் ஸ்டாக் வைத்திருக்கிறாரா? இல்லை தனது திறமை முழுவதையும் இந்த படத்திற்கே செலவிட்டாரா?’ என இவர் கேட்கிறார்கள். பாட்டுகள் அவ்வளவு நன்றாக வந்திருக்கிறதாம்’ என சொல்லிவிட்டு பை நிறைய பணத்தை அவரிடம் கொடுத்தார்.
எம்.எஸ்.வியோ ‘அப்ப பாட்டு அவர்களுக்குதான் பிடித்திருக்கிறது.. உங்களுக்கு பிடிக்கவில்லையா?.. எனக்கு இந்த பணம் எனக்கு வேண்டாம்’ என பொய்யாக கோபம் கொள்ள எம்.ஜி.ஆரோ ‘இல்லை இல்லை. ஒவ்வொரு பாடலும் சிறப்பா இருக்கு. நல்லா இல்லை என்று நான் சொன்னால்தானே நீ இன்னமும் சிறப்பாக பாட்டு போடுவாய்’ என சொல்லி எம்.எஸ்.வி-யை கட்டி அணைத்துக்கொண்டாராம்.
இந்த சம்பவத்தை எம்.எஸ்.வியே ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுக்கும் போது கூறியிருந்தார்.