குரலுக்கு வந்த பிரச்சனை!. வற்புறுத்திய இயக்குனர்.. எம்.ஜி.ஆர் சொன்ன அந்த வார்த்தை..
திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தவர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன். சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமாவில் நுழைந்தவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோவாக மாறியவர். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பல படங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தமிழகத்தின் முதல்வராகவும் மாறினார்.
1967ம் வருடம் ஒரு பிரச்சனையில் நடிகர் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட குண்டு அவரின் கழுத்தில் பாய்ந்தது. அதன்பின் அறுவை சிகிச்சைப்பட்டு எம்.ஜி.ஆர் குணமடைந்தார். ஆனால், அவரின் குரலில் மாற்றம் ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு பின் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட படப்பிடிப்பு காவல்காரன் படத்திற்காகத்தான். ஆனால், படப்பிடிப்பில் சரியாக வசனம் பேசமுடியாமல் அவர் சிரமப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அப்படத்தின் இயக்குனர் நீலகண்டன் ‘உங்களை போலவே பேசும் ஒருவரை வைத்து இப்படத்திற்கு டப்பிங் செய்து கொள்ளலாமா?’ என எம்.ஜி.ஆரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர் ‘இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் எனது சொந்த குரலில்தான் பேசினேன். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இனிமேலும் என் படங்களில் என் குரலில் பேசுவதையே நான் விரும்புகிறேன். என்னுடைய இந்த குரல் என் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை எனில் சினிமாவில் நடிப்பதையே நான் நிறுத்திவிடுவேன்’ என சொன்னாராம். அவர் கூறியது போலவே அவரின் குரலை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின்னரும் அவர் பல படங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.