நான் நடிக்க மாட்டேன்!.. எனக்கு சிவாஜிதான் முக்கியம்!.. கறாராக மறுத்த எம்.ஜி.ஆர்..
திரையுலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் போட்டி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் அண்ணன் தம்பி பாசமாகவே பழகி வந்தனர். நாடகங்களில் நடிக்கும்போதிலிருந்து சிவாஜி மீது பாசமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை சிவாஜி எப்போதும் அண்ணன் என்றுதான் அழைப்பார். அதேபோல் எம்.ஜி.ஆரோ ‘தம்பி கணேசா’ என செல்லமாக அழைப்பார். திரையுலகில் ஒருவரை பற்றி ஒருவரிடம் எப்போதும் அவதூறாகவே பேசுவார்கள். ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அதை அனுமதிக்கவே மாட்டார்கள்.
எம்.ஜி.ஆரை சிவாஜியும், சிவாஜியை எம்.ஜி.ஆரும் எந்த இடத்திலும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தன்னிடம் ஒரு ஆக்ஷன் கதை வந்தால் இதை அண்ணன் பண்ணினால் மட்டுமே நன்றாக இருக்கும் என சொல்லி அந்த இயக்குனரை எம்.ஜி.ஆரிடம் அனுப்பி வைப்பார் சிவாஜி. அதேபோல், என்னை விட சிவாஜியே சிறந்த நடிகர் என பொதுமேடையிலேயே பலமுறை பேசியவர் எம்.ஜி.ஆர்
திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகரின் படம் தோல்வி அடைந்துவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் அந்த நடிகரை வைத்து படம் எடுக்க யோசிப்பார். மேலும், அவருக்கு போட்டியாக இருக்கும் நடிகர் பக்கம் சென்றுவிடுவார். இது காலம் காலமாக சினிமாவில் இருப்பதுதான்.
ஒருமுறை ராஜாமணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாள சந்தானம், மோகன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மோகன் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆரை பார்க்க சென்றனர். சிவாஜியை வைத்து அவர்கள் எடுத்த படம் ஓடவில்லை எனவும், நீங்கள் எங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டனர்.
அதற்கு எம்.ஜி.ஆர் ‘உங்கள் நிறுவனத்தின் பெயர் தம்பி கணேசனின் அம்மா பெயரில் இருக்கிறது. நீங்கள் தயாரிப்பாளர் ஆனதற்கே அவர்தான் காரணம். போன படம் நஷ்டம் எனில் அடுத்த படம் அவரை வைத்தே எடுங்கள். நிச்சயம் லாபம் கிடைக்கும். அவரை விட்டுவிட்டு என்னிடம் வந்தால் அவரின் மனம் எவ்வளவு வேதனை அடையும். எனவே, என்னால் நடிக்க முடியாது’ என அவர் சொல்ல, அவர்களோ விடாமல் ‘சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிறோம்’ என சொல்ல, எம்.ஜி.ஆரோ ‘நீங்கள் தரும் பணத்தை விட கணேசனின் தாயார் படும் வருத்தம் எனக்கு பெரிய நஷ்டம். சிவாஜியின் அம்மா எனக்கு அம்மா போலத்தான். நீங்கள் புறப்படுங்கள்’ என்றாராம்.
நட்புக்கும், அன்புக்கும், உறவுக்கும் எம்.ஜி.ஆர் எவ்வளவுவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு இதுவே சாட்சி.