சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வந்த வாய்ப்பு!.. எம்.ஜி.ஆர் ரியாக்ஷன் இதுதான்!...
நாடக நடிகர்களாக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி. எம்.ஜி.ஆர் ஆக்ஷன் கதைகளில் நடித்தவர். சிவாஜியோ குடும்பபாங்கான, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களி்ல் நடித்தவர். இருவருக்கும் ரசிகர்கள் இருந்தனர்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ‘கூண்டுக்கிளி’ என்கிற ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்தனர். எம்.ஜி.ஆரை சிவாஜி ‘அண்ணன்’ எனவும் எம்.ஜி.ஆர் சிவாஜியை ‘தம்பி கணேசா’ எனவும் அன்போடு பழகி நட்பு பாராட்டி வந்தனர். திரையுலகில் போட்டி நடிகர்களாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும், அன்பும், எப்போதும் எந்த சூழ்நிலையிலும் குறைந்தது இல்லை. அதோடு, சிவாஜியே சிறந்த நடிகர் என பல இடங்களில் எம்.ஜி.ஆரே ஒப்புக்கொண்டுள்ளார்.
நாடகத்தில் பல வருடங்கள் நடித்து வீரசிவாஜி நாடகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அறிஞர் அண்ணாவிடம் சிவாஜி கணேசன் என்கிற பட்டத்தை பெற்றவர்தான் சிவாஜி. அறிமுகமான ‘பராசக்தி’ படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லும் அளவுக்கு பல வேடங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடவுள் அவதாரங்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், சரித்திர நாயகர்கள், புராணங்களிலும், இதிகாசங்களிலும் வந்த கதாபாத்திரங்கள் அதோடு சாமானிய மனிதர்களில் ஏழையாக, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக, பணக்காரராக என நடிப்பில் அவர் காட்டிய பரிமாணம் எண்ணில் அடங்காது.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் சின்ன அண்ணாமலை என்கிற தயாரிப்பாளர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து சில படங்களை தயாரித்துள்ளார். அவர் ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்தித்து ‘நான் உங்களை வைத்து சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதில் நடிக்க வேண்டும்’ என கூற எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார். அதன்பின் இயக்குனர் டி.ஆர் ராமன்னா எம்.ஜி.ஆரை அணுகி அதே ஆசையை தெரிவிக்க எம்.ஜி.ஆரோ ‘சிவாஜி என்கிற பட்டம் தம்பி கணேசனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் அதில் நடிப்பது சரியாக இருக்காது’ என சொல்லிவிட்டார்.
அப்போது ராமன்னா பெரிய இயக்குனராக இருந்தார். ‘நாம் கேட்டு எம்.ஜி.ஆர் முடியாது என சொல்லிவிட்டாரே. இவரை எப்படியாவது இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும். அண்ணா சொன்னால் எம்.ஜி.ஆர் கேட்பார். எனவே, அவரிடம் பேசி எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்கலாம்’ என முடிவெடுத்தார். இதை முன்பே தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் அவருக்கு முன் அண்ணாவை சந்தித்து ‘தம்பி கணேசனுக்கு சிவாஜி பட்டத்தை கொடுத்தவர் நீங்கள்தான். இந்த பட்டம் நிலைத்திருக்க வேண்டுமெனில் அந்த படத்தில் தம்பி கணேசன் நடிப்பதுதான் முறை’என சொல்லிவிட்டார்.
அதன்பின் ராமன்னா அண்ணாவை சந்தித்த போது எம்.ஜி.ஆர் சொன்னதையே அவரிடம் கூறி ‘அதில் கணேசனையே நடிக்க வையுங்கள் பொருத்தமாக இருக்கும்’ என அண்ணா அவரை அனுப்பி வைத்தார்.