Cinema History
சிவாஜி தனக்கு செய்ததை பாக்கியராஜுக்கு செய்த எம்.ஜி.ஆர்!.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!…
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர் ஆக்ஷன் ரூட்டில் பயணிக்க, சிவாஜியோ நடிப்புக்கு தீனி போடும், குடும்ப செண்டிமெண்ட் கதைகளில் நடித்தார். எம்.ஜி.ஆரை சிவாஜியை எப்போதும் அண்ணன் என பாசமாக அழைப்பார். அதேபோல், எம்.ஜி.ஆரும் சிவாஜியை ‘தம்பி கணேசா’ என பாசத்துடன் அழைப்பார். சிவாஜியின் வீட்டிற்கு அடிக்கடி எம்.ஜி.ஆர் மனைவியுடன் சென்று விருந்து சாப்பிடுவார். அதேபோல், சிவாஜி மனைவியுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு செல்வார்.
சினிமாவில்தான் இருவருக்கும் போட்டியே தவிர நிஜவாழ்வில் ஒருவரை ஒருவர் எங்கும் விட்டு கொடுத்தது இல்லை. இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் உண்டு. அதேபோல், எம்.ஜி.ஆர் திரையுலகில் பலருடன் நெருக்கமாக பழகியவர். யாருக்கேனும் பிரச்சனை எனில் முதல் ஆளாக போய் நிற்பார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.
இதையும் படிங்க: சிவாஜி – பத்மினி இடையே இருந்த காதல்!.. கல்யாணத்திற்கு தடையாக இருந்த அந்த காரணம்!..
திரையுலகில் நாகேஷ், நம்பியார், சிவாஜி, அசோகன், கமல்ஹாசன், பாக்கியராஜ் என பலரும் எம்.ஜி.ஆர் நெருக்கமாக பழகினார். இவர்கள் எல்லோரும் அடிக்கடி எம்.ஜி.ஆரை அவரின் ராமாபுர தோட்டத்தில் சந்தித்து பேசுவார்கள். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதும் இது தொடர்ந்தது. அசோகன், பாக்கியராஜ், ராமராஜன் ஆகியோரின் திருமணத்தை கூட எம்.ஜி.ஆர்தான் நடத்தி வைத்தார்.
பாக்கியராஜ் முதலில் பிரவீனா என்கிற நடிகையை 1981ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகி இரண்டு வருடங்களில் பிரவீனா நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். அப்போது எம்.ஜி.ஆர் நேரில் சென்று பாக்கியராஜுக்கு ஆறுதல் சொன்னதோடு, பிரவீணாவை அடக்கம் செய்யும் வரை உடன் இருந்து எல்லா வேலைகளையும் செய்தார். அவரின் இறுதி ஊர்வலத்திலும் எம்.ஜி.ஆர் நடந்து சென்றார்.
இதையும் படிங்க: யார் சிறந்த நடிகர்!. சிண்டு மூட்டிவிட்ட பத்திரிக்கை!. எம்.ஜி.ஆரும் – சிவாஜியும் என்ன பண்ணாங்க தெரியுமா?!..
இது நடந்து ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அதில், எல்லோரும் பாக்கியராஜுக்கு எம்.ஜி.ஆர் செய்ததை பாராட்டி பேசினார்கள். அவர்கள் பேசியன் பின் மைக்கை பிடித்த எம்.ஜி.ஆர் ‘இங்கு எல்லோரும் நான் பாக்கியராஜுக்கு செய்ததை பாராட்டினீர்கள். இந்த பாராட்டு எல்லாம் தம்பி சிவாஜி கணேசனுக்குத்தான் செல்ல வேண்டும்.
ஏனெனில், என் மனைவி இறந்தபோது தம்பி சிவாஜி நேரில் வந்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு, இறுதி யாத்திரையில் கால்கடுக்க நடந்து வந்து எனக்கு ஆதரவாக இருந்தார். அதன்பின் என்னை சாப்பிட வைத்தபின்புதான் சிவாஜி அவரின் வீட்டிற்கே போனார். இப்படி ஒரு நல்ல பண்பை தம்பி கணேசனிடம்தான் நான் கற்றுக்கொண்டேன். அதைத்தான் பாக்கியராஜியிடம் நான் கடைபிடித்தேன்’ என அவர் சொல்ல, எல்லோரும் சிவாஜியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார்களாம்.
எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி இறந்த போது அவருக்கு ஆறுதலாக சிவாஜி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறந்துபோன மனைவி முகத்தை கூட பார்க்க முடியலயே!… எம்.ஜி.ஆர் வாழ்வில் இவ்வளவு சோகமா!..