இவர் என்ன நம்ம ஊரு நம்பியாரா?!.. நக்கலடித்த படக்குழு!.. வெறியோடு சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..
தமிழ் சினிமாவின் பாரம்பரிய பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் அன்பே வா. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம் 1966ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா, அசோகன், டி.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வழக்கமாக எம்.ஜி.ஆர் படத்தில் இருப்பது போல் இப்படத்தில் வில்லன் என யாரே இருக்கமாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் - சரோஜா தேவிக்கும் இடையே இருக்கும் ஈகோவாக சித்தரித்து திருலோகச்சந்தர் திரைக்கதை அமைத்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மனதை மயக்கும் படி அமைத்திருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
வில்லன்தான் இல்லை. எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தில் ஒரு சண்டை காட்சியாவது வைப்போம் என நினைத்த திருலோகசந்தர் ஒரு காட்சியில் சண்டை காட்சி வைத்திருப்பார். அதில், 120 எடை கொண்ட அந்த சிட்டிங் புல் எனும் சண்டை நடிகரை எம்.ஜி.ஆர் தூக்கி மூன்று சுத்து சுத்தி கீழே வீச வேண்டும். எனவே, டூப் போட்டுக்கொள்ளலாம் என இயக்குனர் சொல்ல ‘இல்லை நானே செய்கிறேன்’ என எம்.ஜி.ஆர் சொன்னாராம். அப்போது அங்கிருந்த ஒருவர் எம்.ஜி.ஆர் நம்ம ஊரு நம்பியார வேணா தூக்கி வீசிடலாம். ஆனால், சிட்டிங் புல்லை தூக்க முடியாது என சொல்லி சிரித்தாராம்.
இதைக்கேட்டு எம்.ஜி.ஆருக்கு கோபம் வரவில்லை. அந்த காட்சி 10 நாளுக்கு பின்புதான் எடுக்க திட்டமிட்டிருந்தனர். எனவே, வழக்கமாக ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் எம்.ஜி.ஆர் இன்னும் கொஞ்சம் நேரம் சேர்த்து உடற்பயிற்சி செய்தாராம். மேலும், பளு தூக்கும் பயிற்சியையும் அவர் செய்துள்ளார். 10 நாட்கள் கழித்து அந்த காட்சியை எடுத்தபோது அந்த நடிகரை அப்படியே தூக்கி மூணு சுத்து சுத்தி தூக்கி எறிந்தாராம் எம்.ஜி.ஆர். இதைப்பார்த்து படக்குழுவினர் வியந்து போய் விட்டார்களாம்.
தன்னை பற்றி வந்த கிண்டலுக்கு செயல் மூலமே பதில் சொன்னவர் எம்.ஜி.ஆர் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்!.