Cinema History
பேர் போடலைனா என்ன! கண்டிப்பாக போவேன்; எம்ஜிஆர் கலந்து கொண்ட விழா
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவரைப் பற்றி பேசாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்து விட்டு சென்று இருக்கிறார் எம்ஜிஆர்.
அந்தக் காலங்களில் நடிகர்களுக்குள் ஒருவித நட்பு இருந்து கொண்டே தான் வந்தது. அவர்களுக்குள் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் போட்டி பொறாமைகள் இல்லாமல் மிகவும் அன்பாகவும் அக்கறையோடும் தான் இருந்து வந்தனர்.
அந்த வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று இப்போது வைரலாகி வருகின்றது. பழம்பெரும் நடிகர் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் இவர்கள் இருவரும் மிகவும் நட்பாகவும் சகோதரத்துவத்துடன் நடந்து வந்திருக்கின்றனர். ஒரு சமயம் எஸ் எஸ் ராஜேந்திரன் அவருடைய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு எம்ஜிஆரை பத்திரிகை வைத்து அழைக்க வந்தாராம்.
அவரை வரவேற்று எம்.ஜி.ஆர் எஸ் எஸ் ராஜேந்திரனை சாப்பாட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாராம். உடன் இருந்த உதவியாளர் ஒருவர் அந்த அழைப்பிதழை பிரித்துப் பார்க்க அதில் எம்ஜிஆர் பெயர் போடவில்லையாம். உடனே அந்த அழைப்பிதழை ஜானகி இடமும் அந்த உதவியாளர் காட்டி இருக்கிறார். அவரும் பார்க்க எம்ஜிஆர் பெயர் மட்டும் அதில் இடம்பெற வில்லையாம். மற்றபடி திமுக தலைமை பெயர்கள் எல்லாம் போடப்பட்டிருக்கின்றன.
அதன் பிறகு எஸ் எஸ் ராஜேந்திரன் போன பின்னர் இதை எம்ஜிஆர் இடம் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டதும் எம்ஜிஆர் “பெயர் போடவில்லை என்றால் என்ன? தம்பிக்காகவும் என் அம்மாவிற்காகவும் கண்டிப்பாக செல்வேன்” என கூறினாராம். எம்ஜிஆர் அம்மா என சொன்னது எஸ் எஸ் ராஜேந்திரனின் அம்மாவை தான். எப்பொழுதுமே எஸ் எஸ் ராஜேந்திரனின் அம்மாவை எம்.ஜி.ஆரும் அம்மா என்றே தான் அழைப்பாராம். அதன் பிறகு அந்த அழைப்பிதலை எம்ஜிஆர் பார்க்க அதில் உறவினர்கள் பெயர் இருக்கும் இடத்தில் அண்ணன்கள் என்ற தலைப்பில் முதல் பெயராக எம்ஜிஆர் நடிகர் என்று போடப்பட்டிருந்ததாம்.