சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு விதை போட்ட எம்.ஜி.ஆர் பட இயக்குனர்… என்னப்பா சொல்றீங்க?
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா” முதல் பாகம். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்து மாஸ் ஹிட் ஆனது. இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் “உ சொல்றியா” என்ற பாடல் மிக புகழ்பெற்ற பாடலாக வலம் வந்தது.
இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்பாடலில் சமந்தா மிகவும் சிறப்பாகவும் கவர்ச்சியாகவும் நடனமாடி இளைஞர்களை சொக்க வைத்தார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமந்தா பாடலுக்கு விதை போட்ட எம்.ஜி.ஆர் இயக்குனர்
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தனது யூட்யூப் சேன்னலில் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றில் பேசிய அவர், “2021 ஆம் ஆண்டு இறுதியிலே வந்து வெற்றியை குவித்த திரைப்படமாக புஷ்பா திரைப்படம் அமைந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணமாக சமந்தா நடனமாடிய ‘உ சொல்றியா’ பாடல் அமைந்தது. இந்த பாடலில் மிகவும் அற்புதமாக நடனமாடியிருந்தார் சமந்தா.
இப்படி பிரபலமான நடிகை ஒரு படத்தில் ஒரு பாடலில் நடனமாடுவது என்பது சமீப காலமாக எல்லா திரைப்படத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. முன்னணி கதாநாயகிகளை ஒரு பாடலில் ஆடச்சொல்வது இப்போது ஒரு ஃபேஷனாக ஆகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் விதை போட்டவர் யார் என்று தெரியுமா? மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரான டி.ஆர்.சுந்தரம் அவர்கள்.
அவர் உருவாக்கிய ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஹிந்தியில் மிகப் பிரபலமாக இருந்த வஹீதா ரஹ்மான் என்ற நடிகையை அழைத்து வந்து நடனமாட வைத்தார். இன்றைக்கு பார்த்தீர்களானால் சர்வ சாதாரணமாக ஹிந்தி நடிகைகள் தமிழில் நடிக்கிறார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் இதெல்லாம் மிக அரிதான ஒன்று.
அப்படி இருக்க வஹீதா ரஹ்மானை அழைத்து வந்து ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைத்தார். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்தின் வெற்றிக்கு அந்த பாடலுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்று ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேவர் மகனில் ஐஸ்வர்யா!.. கடுப்பான பாக்கியராஜ்!.. கடைசி நேரத்தில் எப்படி மாறியது தெரியுமா?