பதுங்கிக்கொண்டு படமெடுக்க நினைத்த எம்.ஜி.ஆர்… கடைசில இப்படி ஏமாத்திட்டீங்களேப்பா!..
எம்.ஜி.ஆர் பொதுவாக வெளிப்புற படப்பிடிப்பில் பாடல் காட்சிகளை படமாக்க அவ்வளவாக விருப்பம் காட்டமாட்டாராம். பெரும்பாலும் ஸ்டூடியோவுக்குள்ளேயேதான் பாடல் காட்சியை படமாக்க விரும்புவாராம். வெளிப்புற படப்பிடிப்பில் பாடல் காட்சியை படமாக்கினால் பொது மக்கள் முன்பு தனக்கு நடன கலைஞர் நடனம் சொல்லிக்கொடுப்பதை அவர் விரும்பமாட்டாராம். இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் போது எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தி ஆள் அரவமே இல்லாத ஒரு பள்ளதாக்கினில் வெளிப்புறப் படப்பிடிப்பு நடத்துவதற்கு தயார் செய்தார்களாம். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்பே வா”. இத்திரைப்படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் பார்த்ததிலே, அவள் ஒருத்தியைத்தான்” என்ற பாடலை வெளிப்புறத்தில் படமாக்கினால் நன்றாக இருக்கும் என ஏவிஎம் சரவணன் கூறினாராம். எம்.ஜி.ஆர் பாடல் காட்சியை பொதுவெளியில் படமாக்க விரும்பமாட்டார் என்பதால் ஆள் அரவமே இல்லாத ஒரு பள்ளத்தாக்கை தேர்ந்தெடுத்தார் ஏவிஎம் முருகன்.
அதன் பின் எம்.ஜி.ஆரிடம் “நான் ஒரு அருமையான இடத்தை தேர்வு செய்திருக்கிறேன். அந்த இடத்துக்கு ஜனங்களே வரமாட்டாங்க” என கூறினார் ஏவிஎம் முருகன். “நீங்க சொன்னா சரிதான் முதலாளி” என எம்.ஜி.ஆரும் வெளிப்புறத்தில் பாடலை படமாக்க ஒப்புக்கொண்டாராம்.
இதனை தொடர்ந்து அப்பாடல் அந்த பள்ளத்தாக்கில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாரா விதமாக திடீரென அங்கே மக்கள் கூடத்தொடங்கிவிட்டார்களாம். இதனை பார்த்த எம்.ஜி.ஆர் “ஆளே இல்லாத இடத்தை தேர்வு செய்திருக்கிறேன்னு சொன்னாரே, அந்த முருகன் சார் எங்க?” என கிண்டல் செய்தாராம். எனினும் அந்த பாடல் காட்சியில் முழுவதுமாக நடித்துக்கொடுத்தாராம் எம்.ஜி.ஆர்.
Also read : சிங்கக் கூண்டில் மாட்டுன கதையாக வி.கே.ராமசாமியின் நிலைமை!.. நடிகவேளிடம் சிக்கி முழித்த சம்பவம்..