Cinema History
சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..
எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர்கள். சிவாஜியை விட எம்.ஜி.ஆர் மூத்தவர். நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் பணமில்லாமல் சிவாஜி கஷ்டப்பட்டபோது எம்.ஜி.ஆர் அவருக்கு பல உதவிகளை செய்ததாக கூறப்படுவதுண்டு. எம்.ஜி.ஆர் எப்போது வருவார் என் சிவாஜி காத்திருப்பார் எனவும், எம்.ஜி.ஆர் சம்பாதித்த பணத்தில் சிவாஜி உள்ளிட்ட சிலருக்கு அவர் சாப்பாடு வாங்கி கொடுப்பாரெனவும் செய்திகள் உள்ளது.
பின்னாளில் ஒருமேடையில் பேசிய நடிகர் திலகம் சிவாஜி ‘ஒரு அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்ட எங்களை இந்த கேடுகெட்ட அரசியல் பிரித்துவிட்டது’ என பேசியிருந்தார். அவர் அப்படி சொன்னதற்கு பின்னால் பல வருட கதைகளும், வறுமையும், பசியும் இருக்கிறது. அது பலருக்கும் தெரியாதது.
இதையும் படிங்க: கதாநாயகியின் குளியல் காட்சி!.. கண்டுக்காம விட்ட சென்சார் போர்டு!.. அப்பவே அந்த மாதிரி!…
தனக்கு வரும் ஆக்ஷன் கதைகளை ‘இது அண்ணன் செய்தால்தான் பொறுத்தமாக இருக்கும்’ என எம்.ஜி.ஆருக்கு திருப்பி விடுவார் சிவாஜி. அதேபோல், நடிப்புக்கு தீனி போடும் குடும்ப, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த கதை எனில் ‘இது தம்பி கணேசன் செய்தால் மட்டுமே சரியாக இருக்கும்’ என எம்.ஜி.ஆர் சொல்லிவிடுவார். எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் உண்டு, தன்னை பெருமையாக பேசுவதற்காக மற்றவர்களை மட்டம் தட்டும்படி வசனமோ, பாடல் வரிகளோ இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். அதேநேரம், மறைமுகமாக தனது கருத்துக்களையும் சொல்வார்.
சிவாஜி நடித்து 1964ம் வருடம் வெளியான திரைப்படம் ஆண்டவன் கட்டளை. அதன்பின் 3 வருடம் கழித்து எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்கும் அரச கட்டளை படம் உருவானது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதிய கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை குஷிப்படுத்துவதற்காக ‘ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும்’ என எழுதியிருந்தார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தையே ஏற்படுத்திவிட்டது. வாலியிடம் கத்திய அவர் ‘என்ன பாட்டு எழுதி இருக்கிறீர்கள். இப்படியெல்லாம் வரிகள் இருந்தா தம்பி சிவாஜியை கிண்டல் செய்கிறோம்’ என மக்கள் நினைப்பார்கள்’ என சொன்னார். அதன்பின் வாலி வேறு வரிகளை எழுதி கொடுத்தார். ஆனாலும், எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை.
ஏனெனில் அப்போது திமுகவுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் இருந்தார். எனவே, அது தொடர்பாக வரிகள் பாடலில் வர வேண்டும். அதேபோல், தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் சென்சார் போர்டுக்கு எச்சரிக்கை விடுவது போல் வரிகள் இருக்க வேண்டும் எனவும் அவர் நினைத்தார். முத்துக்கூத்தன் என்கிற கவிஞர் வரவழைக்கப்பட்டார்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை’ என பல்லவி எழுதினார் முத்துக்கூத்தான். வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர் ‘இது போதும்.. இது போதும். பிரமாதம்’ என முத்துக்கூத்தனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம். அந்த பாடலின் சரணத்திலும் மயிலாட வான்கோழி தடை செய்வதோ.. மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ.. புயலுக்கும் நெருப்புக்கும் திரைபோடவோ.. மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ’ என சென்சார் போர்டையும் முத்துக்கூத்தன் கிழிகிழியென கிழித்திருப்பார்.
இதையும் படிங்க: கூடவே இருந்து முதுகில் குத்திய அசோகன்! நிஜத்திலும் வில்லனாகவே இருந்திருக்காருப்பா..