எம்ஜிஆர் நடித்து பாதியில் நின்று போன படங்கள் - ஓர் பார்வை
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரையில் வந்து விட்டால் போதும். அவரது ரசிகர்கள் போடும் ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இல்லை. இன்றும் மதுரை சென்ட்ரல் சினிமா, மீனாட்சி தியேட்டர்களில் போய் எம்ஜிஆர் நடித்த படங்களைப் பார்க்கப்போனால் இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்கூடாகக் காணலாம். எம்ஜிஆர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் சூடம் காட்டி தீபாராதனைக் காட்டுவார்கள். தலைவா என்று கும்பிடுவார்கள்.
படத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து பேனர் கட்டி தோரணம் கட்டி என்று புதிய படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை தருவார்கள். பாடல்களை ஒன்ஸ்மோர் கேட்பார்கள். இன்றும் அந்தக்கால பெரியவர்களிடம் எம்ஜிஆர் படங்கள் ரீலீஸ் ஆனதைப் பற்றிக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். எத்தனை நாள் ஓடின? அப்போது உடன் வந்த படங்கள் என்னென்ன? எம்ஜிஆரின் நடிப்பு எப்படி இருந்தது என்று காட்சிக்கு காட்சி விளக்குவார்கள்.
பிரபல நடிகர்களின் படங்கள் கூட தவிர்க்க இயலாத சில காரணங்களினால் பாதியில் நின்று விடுகின்றன. அந்தகாலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்களான சாயா, ஊமையன் கோட்டை, அன்று சிந்திய ரத்தம், ரிக்ஷா ரங்கன், லலிதாங்கி, சிரிக்கும் சிலை, இதுதான் என் பதில், நல்லதை நாடு கேட்கும், மாடி வீட்டு ஏழை, இணைந்த கைகள் ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இவற்றில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை 1960ல் சி.வி.ஸ்ரீதர் இயக்கினார். ஆனால் சில காரணங்களால் இந்தப் படமானது படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கைவிடப்பட்டது. அடுத்ததாக பைரவி படம். ஏ.கே.வேலன் கதை எழுத, மஸ்தான் இயக்கினார். இந்தப்படத்தை எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணி தயாரித்தார்.
இந்தப்படமும் ஏதோ சில காரணங்களினால் அப்படியே முடங்கிப்போனது. பின்னாளில் சக்கரபாணி இந்தப்படத்தை எம்ஜிஆர் நடிக்க அரச கட்டளை என்ற பெயரில் ரிலீஸ் செய்தார். சாயா என்ற படமானது பக்ஷிராஜா பேனரில் தயாராவதாக இருந்தது. ஆனால் இந்தப்படமும் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பே நின்று போனது.
1966ல் மாடிவீட்டு ஏழை என்ற படத்தில் எம்ஜிஆரும், பிரபல காமெடி நடிகர் ஜே.பி.சந்திரபாபுவும் இணைந்து நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் கிடப்பில் போடப்பட்டது.
மக்கள் என் பக்கம் என்ற படமானது முதலில் எம்ஜிஆர் தான் நடிப்பதாக இருந்தது. எம்ஜிஆர் திரையுலகில் இருந்து அரசியல் பக்கம் வந்ததால் கைவிடப்பட்டது. பின்னாளில் இதே தலைப்பில் வெளியான படத்தில் சத்யராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடோடியின் மகன் என்ற ஒரு படத்தில் எம்ஜிஆர் நடிப்பதாக இருந்தது. இந்தப்படம் 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் 2ம் பாகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேறாமல் போனது.
பரமபிதா என்று ஒரு படத்தில் எம்ஜிஆர் இயேசு கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. இந்தப்படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் எம்ஜிஆர் இடையிலேயே இந்தப்படத்தில் இருந்து விலகினார்.
1958ல் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் எம்ஜிஆர் நடிப்பதாக அறிவித்தார். இது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவியது. எம்ஜிஆர் இந்த நாவலின் திரைப்பட உரிமையை 10 ஆயிரம் ரூபாய்;க்கு வாங்கினார்.
2020ல் இதன் மதிப்பு 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். எம்ஜிஆருடன் இணைந்து ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்ரி, பி.சரோஜாதேவி, எம்.என்.ராஜம், டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஓ.ஏ.கே.தேவர், சித்தூர் நாகையா ஆகியோர் நடிப்பதாக இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக எம்ஜிஆர் ஒரு விபத்தில் சிக்கினார். காயம் பலமாக இருந்ததால் குணமாக 6 மாதமாகும் என்றனர். அதன்பின்னர் அந்தப்படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நாவலுக்கான உரிமையைப் புதுப்பித்தனர். அப்போதும் எம்ஜிஆரால் அந்தப்படத்தைத் தொடர முடியாமல் போனது.
அதே போல் உத்தமபுத்திரன் என்ற படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சிவாஜி கணேசன் நடிப்பில் அதே பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்தது. அதனால் எம்ஜிஆரின் இந்தப்படமும் கைவிடப்பட்டது.
அதே போல் எம்ஜிஆர் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவித்து விட்டு சில படங்கள் கைவிடப்பட்டன. அந்தப்படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா...
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ, மறுபிறவி, இன்பக்கனவு, உன்னை விட மாட்டேன், சமூகமே நான் உன் சொந்தம், உங்களுக்காக நான், தியாகத்தின் வெற்றி, தேனாற்றங்கரை, தந்தையும் மகனும், சிலம்புக்குகை, கேரளக்கன்னி, குமாரதேவன், மலைநாட்டு இளவரசன், வாழப்பிறந்தவன், ஊரே என் உறவு, பைலட் ராஜ், எல்லைக்காவலன், நானும் ஒரு தொழிலாளி.
ஆனால் மேற்கண்ட படங்களில் பின்னாளில் கமல் நடிப்பில் நானும் ஒரு தொழிலாளி என்ற பெயரிலான படம் வெளியானது ;.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற படம் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தொடர்ச்சியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏதோ சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. 2018ல் இந்தப்படத்தில் எம்ஜிஆர் நடிக்க படம் முழுவதும் அனிமேஷனில் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டு டிரெய்லரும் வெளியானது. குறிப்பிடத்தக்கது;
ஸ்ரீதர் இயக்கிய அண்ணா என் தெய்வம் படத்தில் எம்ஜிஆர் நடித்தார். ஆனால் இந்தப்படம் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்டது. தொடர்ந்து இந்தப்படத்தின் காட்சிகளை பாக்யராஜ் அவரது அவசர போலீஸ் 100 என்ற படத்தில் கச்சிதமாக இணைத்து விட்டார்.