எம்.ஜி.ஆரிடம் நிஜ சண்டை போட்ட மல்யுத்த வீரர்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்ட்!..
நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் பெரிய நடிகராக ஆக வேண்டும் என முடிவு செய்தபின் மல்யுத்தம், கத்தி சண்டை, குதிரையேற்றம் என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர் கற்றுக்கொண்டார். அதனால்தான் அவரின் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சரித்திர கதை கொண்ட திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் போடும் வாள் சண்டைக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. அதை புரிந்து கொண்டு இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கும்போது அதிகமான சண்டை காட்சிகளை வைத்தனர்.
சிவாஜி நல்ல செண்டிமெண்ட் கதைகளிலும், குடும்பபாங்கான கதைகளிலும் நடித்து வந்தார். எனவே, எம்.ஜி.ஆர் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார். இது தன்னுடைய பாணி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரின் படங்களில் திடகாத்திரமான பல அடியாட்களுடன் எம்.ஜி.ஆர் சண்டை போடுவார். அவர்களை எம்.ஜி.ஆர் வீழ்த்தும்போது திரையரங்குகளில் விசில் பறக்கும்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகி 1963ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சித்தலைவன். இந்த படத்தில் நிறைய கத்தி சண்டைகள் எடுத்துவிட்டதால் ஒரு மல்யுத்த சண்டை காட்சியை வைக்கலாம் என அப்படத்தின் இயக்குனர் நினைத்தார். எனக்கும் மல்யுத்தம் தெரியும்.. சரி என எம்.ஜி.ஆரும் சம்மதம் சொன்னார். எம்.ஜி.ஆரோடு மோதுவதற்கு புஜ்ஜையா என்கிற வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் காவல் துறையில் வேலை செய்தபோது பல மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று பரிசுகளை வென்றவர். அவருடன் எம்.ஜி.ஆர் மோதும் சண்டை காட்சி எடுக்கப்பட்டது. அப்போது திடீரென புஜ்ஜையாவை தலைக்கு மேல் தூக்கி வீசியுள்ளார் எம்.ஜி.ஆர். இதைக்கண்டு படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
கீழே விழுந்த புஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழ வந்தார். அவரை தடுத்து கட்டியணைத்து கொண்டார் எம்.ஜி.ஆர். அப்போது புஜ்ஜையா எம்.ஜி.ஆரை கையெடுத்து கூம்பிட்டுவிட்டு ‘இதுவரை என்னை யாரும் இப்படி தூக்கி வீசியதில்லை. நீங்கள் உண்மையிலேயே பெரிய வீரர்தான். நான் சினிமா சண்டை என்பதை மறந்து உங்களிடம் என் பலத்தை காட்டினேன். நீங்கள் உங்கள் பலத்தை காட்டி என்னை ஜெயித்துவிட்டீர்கள்’ என சொன்னாராம்.
போட்டி என வந்துவிட்டால் எம்.ஜி.ஆர் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் என்பது இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.