Cinema History
பட்ஜெட் அதிகமாகி தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட படங்கள்!.. அட இவ்வளவு இருக்கா?..
தமிழ்த்திரை உலகைப் பொருத்தவரையில் அந்தக் காலத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வந்தன. அதன் கதை காரணமாக எளிதில் வெற்றி பெற்றன. அதே நேரம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படங்கள் படுதோல்வியைத் தழுவிய சம்பவங்களும் நடந்ததுண்டு. படங்களைப் பொருத்தவரை தயாரிப்பாளர்கள் இந்தக் குதிரை ஓடும் என்று நம்பித்தான் பணத்தை வாரி இறைக்கின்றனர்.
அது பட்ஜெட்டையும் தாண்டிச் செல்லும் போது கொஞ்சம் தயங்குகின்றனர். பின்னர் போட்ட பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டுமே என்று எண்ணி படம் முடியும் வரை பட்ஜெட்டைத் தாண்டியும் கடனை உடனே வாங்கி செலவழித்து எடுத்து முடிக்கிறார்கள். படம் ஓடினால் தான் இவர்களுக்கு எதிர்காலம். இல்லை என்றால் அதோ கதி தான்.
வருஷம் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறுவதில்லை. 1981ல் நான் இரு புத்தகங்கள் எழுதினேன். ஒண்ணு 80 ஆண்டு கால தமிழ்சினிமா முதல் பாகம் என்ற புத்தகம். அதில் தமிழ்சினிமாவின் வரலாறு பற்றி எழுதினேன். அடுத்து என்னவென்று சொல்வேன்… என்ற புத்தகம்.
அதில் சினிமாவின் நடந்த பல நிகழ்ச்சிகள் மற்றும் வியாபாரம் குறித்து எழுதி இருந்தேன். படத்தோட பட்ஜெட்டுக்குள்ள படத்தை எடுத்து முடிக்க முடியாதது தான் தயாரிப்பாளர்களுக்கு அப்போது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது என்கிறார் பிரபல சினிமா விமர்சகர் சித்ராலெட்சுமணன். மேலும் இதுகுறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
ஐந்தரை கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட நான் கடவுள் திரைப்படம் ஏழரை கோடி என்று முடிவாகி பதிமூன்றரை கோடி ரூபாயில் முடிவடைந்தது. 5 கோடி ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 16 கோடி ரூபாயில் முடிவாகி முடியும் போது 32 கோடியில் முடிவடைந்தது.
120 கோடி ரூபாய் என்ற பட்ஜெட்டில் துவங்கப்பட்ட எந்திரன் படம் முடியும் போது 150 கோடி ரூபாய் ஆனது. இப்படி பல படங்கள் பட்ஜெட்டுக்குள் முடிக்க முடியாமல் தாறு மாறாக ஏறி அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நட்டத்திற்கு ஆளானார்கள்.
இன்றைக்கும் பல தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதற்கு உதாரணமாக பல படங்களை என்னால் சுட்டிக்காட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.