எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமே காப்பியா?!.. அட இந்த பிரச்சனை அப்ப இருந்தே இருக்கா!..

by சிவா |   ( Updated:2023-05-05 04:42:09  )
mgr
X

mgr

நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராகவும், மிகப்பெரிய சினிமா ஆளுமையாகவும் மாறியவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி கொண்டவர். கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்கிற செய்தியை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

இந்த கதை என்னுடையது.. அவரிடம் சொன்னேன். என்னிடம் சொல்லாமேலே அப்படத்தை எடுத்துவிட்டார் என ஒரு உதவி இயக்குனர் சமூகவலைத்தளங்களில் புலம்புவது அடிக்கடி பார்க்கும் செய்தியாக மாறிவிட்டது. முருகதாஸ், ஷங்கர் என பெரிய இயக்குனர்களே இதில் தப்பவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்குகளை சந்தித்தனர்.

ஆனால், இது இப்போதுதான் நடைபெறுகிறதா என்றால் அதுதான் இல்லை!.. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இது தொடர்ந்து வருகிறது. அதுவும் எம்.ஜி.ஆர் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமான ‘சதிலீலாவதி’ படமே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்த படம் 1936ம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு எஸ்.எஸ்.வாசன் கதை, திரைக்கதை அமைத்திருந்தார். எலிஸ் டங்கன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இது எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படமல்ல. எம்.கே.ராதா, டி.ஆர். பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேல் ஆகியோருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இப்படத்தின் கதையை அதே தலைப்பில் எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனில் தொடராக எழுதியிருந்தார். அதன்பின் அதை திரைப்படமாக எடுத்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, இதேபோன்ற கதையில் வேறொரு படம் உருவாகி வருவதாக வாசனுக்கு தெரியவந்தது. இந்த பிரச்சனை நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றத்தில் வாசன் ஒரு தகவலை சொன்னார்.

ஹென்றி வுட் என்கிற எழுத்தாளர் எழுதிய ‘Danbury house’ என்கிற ஆங்கில நாவலை வைத்து தழுவிதான் சதிலீலாவதி கதை எழுதப்பட்டதாக வாசன் தெரிவித்தார். அப்போதுதான், மற்றொரு படமும் அதே நாவலை அடிப்படையாக வைத்து உருவானது நீதிபதிக்கு தெரியவந்தது. வழக்கு முடிந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அந்த காலத்தில் நிறைய படங்கள் ஆங்கில திரைப்படங்கள் மற்றும் நாவல்களை அடிப்படையாக வைத்து உருவானதும், அதோடு, கதை திருட்டு பிரச்சனை அப்போதே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story