அம்மாவின் கடைசி ஆசை!.. EMI கட்டி நிறைவேற்றிய எம்.ஜி.ஆர்… ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!…
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக கொடிகட்டி பிறந்தவர் எம்.ஜி.ஆர். அவரை மீறி திரையுலகில் ஒன்றும் நடக்காது என்கிற நிலை கூட ஏற்பட்டது. தயாரிப்பாளர்களின் கைகளில் இருந்த திரையுலகம் நடிகர்களின் கைக்கு மாறியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதேநேரம் ஈகோ இல்லாமல், தலைக்கணம் இல்லாமல் எல்லோரிடம் நன்றாக பழகும் பண்பான, பக்குவமான மனிதராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதுதான் அவரை உச்சிக்கு கொண்டு சென்றது. தன்னை வெறுத்தோருக்கும், தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கும் கூட அவர் பல உதவிகளை செய்தார்.
ஆனால், எம்.ஜி.ஆரின் துவக்கம் மகிழ்ச்சியால் நிரம்பியது இல்லை. குடும்ப வறுமை காரணமாக எம்.ஜி.ஆரும், அவரின் அண்ணன் சக்கரபாணியும் சிறுவயது முதலே நாடகத்தில் நடிக்க துவங்கினர். அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் வீட்டில் அனைவரும் சாப்பிட்டினர். பல வருடங்கள் இப்படித்தான் போனது. சில நாட்கள் வீட்டில் அரிசி வாங்க கூட பணம் இருக்காது. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு உதவியவர்கள் அவரின் நண்பர்கள்தான்.
அடையாறு என்பது சென்னையின் புறநகர் பகுதியாக கருதப்பட்ட காலத்தில் அந்த பகுதியில் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் வாடகைக்கு குடியிருந்தார். அதன்பின் சென்னைக்குள் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். அந்த வீட்டை காலி செய்துவிட்டு எல்டாம் சாலையில் ஒரு வீட்டிற்கு சென்றார். ஒரு நாள் எம்.ஜி.ஆரின் அம்மா சத்யபாமா ‘நான் விரைவில் இறந்துவிடுவேன். வாடகை வீட்டில் இறக்க எனக்கு விருப்பமில்லை. ஒரு வீட்டை விலைக்கு வாங்குங்கள்’ என சொன்னதும் எம்.ஜி.ஆரும், அவரின் அண்ணன் சக்கரபாணியும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
‘நீங்கள் பல வருடங்கள் எங்களுடன் வாழ்வீர்கள். உங்கள் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்’ என சொன்ன எம்.ஜி.ஆர் அவர் குடியிருந்த அந்த வீட்டையே 36 ஆயிரம் ரூபாய்க்கு பேசி வீட்டின் உரிமையாளரிடம் மாதா மாதம் ரூ.9 ஆயிரம் என நான்கு மாதங்கள் கொடுத்து அந்த வீட்டை சொந்தமாக்கி கொண்டாராம்.
அதன்பின்னர் சில வருடங்கள் கழித்து அவர் பெரிய நடிகரான பின் தி.நகரில் வீடு வாங்கி குடியேறினார். சில வருடங்கள் அந்த வீட்டில் வசித்த எம்.ஜி.ஆர், அதன்பின் ராமாபுரம் பகுதியில் இடம் வாங்கி அங்கு செட்டிலானார் என்பது குறிப்பிடத்தக்கது.