காற்றில் வந்த பாடல்!. மெய்மறந்த எம்.ஜி.ஆர்.. எஸ்.பி.பிக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..
திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு பாட வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஏனெனில், அவரின் ஆஸ்தான பாடகராக டி.எம்.சவுந்தரராஜன் இருந்தார். துவக்கம் முதலே எம்.ஜி.ஆருக்கு அவர்தான் பாடி வந்தார். அதோடு, அவரின் குரல் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு பொருத்தமாகவும் இருந்தது. எனவே, தனக்காக பாட வேறு ஒரு பாடகரை எம்.ஜி.ஆரால் யோசித்து கூட பார்க்கமுடியவில்லை.
அப்படி இருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்தார். அப்போதுதான் அருகிலிருந்து ஸ்டுடியோவில் ஒரு பாடல் கேட்டது. இது நம்முடைய படத்தில் இடம் பெற்ற பாட்டு. ஆனால் தெலுங்கில் பாடுகிறார்கள். கேட்க நன்றாகவும் இருக்கிறது என யோசித்த எம்.ஜி.ஆர் அங்கிருந்த உதவியாளரை அனுப்பி விசாரித்துள்ளார்.
அது குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்’ பாடல். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற புதிய பாடகர் இந்த பாடலை பாடிக்கொண்டிருக்கிறார் என் அவர் சொன்னதும், அந்த குரல் பிடித்துப்போன எம்.ஜி.ஆர் உடனே எஸ்.பி.பியை வரவழைத்து ‘உன் குரல் நன்றாக இருக்கிறது. எனக்காக ஒரு பாடலை பாட முடியுமா?’ எனக்கேட்க எஸ்.பி.பி மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாராம்.
அப்போது எம்.ஜி.,ஆர் அடிமைப்பெண் படத்தில் நடித்து வந்தார். அப்படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைப்பாளர் என்பதால் அவரிடம் இந்த பையனை ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை பாட வைக்கலமா எனக்கேட்க, அவரும் சம்மதம் சொல்ல அதன்பின்னரே அந்த பாடலை எஸ்.பி.பி.பாடினார்.
ஆனால், இதற்கு பின்னணியிலும் ஒரு கதை உண்டு. இந்த பாட்டு பாடுவதற்கு முன் எஸ்.பி.பிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் சில மாதங்கள் அவர் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. எனவே, அந்த பாடலை வேறு யாராவது பாடியிருப்பார்கள் என எஸ்.பி.பி நினைத்தாராம். ஆனால், உடல்நிலை சரியான பின் அவரையே அழைத்து அந்த பாடலை எம்.ஜி.ஆர் பாட வைத்துள்ளார். ‘எம்.ஜி.ஆருக்கு பாடப்போகிறேன் என எல்லோரிடமும் சொல்லி இருப்பாய். அது நடக்கவில்லை எனில் ஏமாற்றமாக இருக்கும். அதனால்தான் நீ வரும் வரை காத்திருந்தேன்’ என எம்.ஜி.ஆர் சொல்ல எஸ்.பி.பி நெகிழ்ந்து போனாராம்.