பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் செய்த பேருதவி!.. இப்படியும் ஒரு மனிதரா?!..

நடிகர் எம்.ஜி.ஆர் ஏழு வயது முதலே வறுமையை பார்த்தவர். நாடகத்தில் நடித்தால் தன் குழந்தைகளுக்கு வேளைக்கு சாப்பாடு கிடைக்கும், உடை கிடைக்கும் என்கிற காரணத்தினாலேயே அவரின் அம்மா சத்யா எம்.ஜி.ஆரையும், அவரின் அண்ணன் சக்கரபாணியையும் நாடகத்திற்கு அனுப்பி வைத்தவர். இதனாலேயே அம்மாவை பிரிந்து பல கிலோ மீட்டர் தூரம் இருந்த நாடக்குழுவில் தங்கி நடித்து வந்தார்.
வறுமையின் உச்சத்தை பாத்தவர் என்பதாலோ என்னவோ அவர் பணம் சம்பாதிக்க துவங்கியதும் யாரை சந்தித்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வியே ‘சாப்பிட்டு விட்டீர்களா?’ என்பதுதான். ஏனெனில் அவர் முன் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என நினைக்கும் மனிதர் அவர்.
அதுமட்டுமல்ல தன் முன் யார் கஷ்டப்பட்டாலும் சரி, அதேபோல் தன்னை தேடி உதவி கேட்டு யார் வந்தாலும் சரி, அவர்களுக்கு என்ன தேவையை அதை செய்து கொடுப்பார். அதனால்தான், ராமபுரம் வீட்டில் அவரை பார்க்க தினமும் அவ்வளவு பேர் வருவார்கள். மொத்தத்தில் அவரை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை.
எம்.ஜி.ஆர் காலத்தில் சினிமாவில் புயலென நுழைந்த பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் ‘தூங்காதே தம்பி தூங்கதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ என்கிற அர்த்தமுள்ள பாடலை எழுதியிருப்பார். இவர் எழுதிய எல்லா பாடல்களிலும் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் நிச்சயம் இருக்கும். எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமாரி படத்தில் ‘சின்ன பயலே சின்ன பையலே சேதி கேளடா’ என்கிற பாடலை எழுதியிருப்பார். இவர் 1959ம் வருடம் தனது 29 வயதிலேயே மரணமடைந்தார்.
அவரின் குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் சொன்ன எம்.ஜி.ஆர், நாடோடி மன்னன் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் அந்த படத்தின் பாடல் உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்.
ஒரு பாடலாசிரியருக்கு பாடலின் உரிமையை கொடுத்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.