டைரக்டர் ஆக்சன் சொன்னவுடன் நிஜமாகவே தூக்கில் தொங்கிய எம்.ஜி.ஆர்..பதைபதைத்துப்போன படக்குழு...

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவர் என்று புகழப்படுபவருமான எம் ஜி ஆர், தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டு வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையுடன் தான் போராடி வந்துள்ளார்.
பல ஸ்டூடியோக்களில் கதாநாயக வேடத்திற்காக அலைந்து திரிந்த எம் ஜி ஆருக்கு “சாயா” என்ற திரைப்படத்தில் ஹீரோ ரோல் கிடைத்தது. நந்தலால் என்ற இயக்குனர் அத்திரைப்படத்தை இயக்க, நாராயணன் சினிமா கம்பெனி தயாரிக்க முடிவு செய்தது. குமுதினி என்ற பிரபல நடிகை கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“சாயா” திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கின. படப்பிடிப்பு எந்த தடையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த வேளையில் தான் எம் ஜி ஆரின் மனைவி பார்கவியின் இறப்பு செய்தி வருகிறது. மனைவியை பார்க்க ஓடிச்சென்றும் அவரது முகத்தை பார்க்க முடியாமல் போனது.
அதன் பின் எம் ஜி ஆருக்கு சதானந்தவதி என்பவருடன் உடனே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் “சாயா” திரைப்படத்தில் நடிக்க வந்தார். ஆனால் படக்குழு எம் ஜி ஆரை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டது.
இப்படிப்பட்ட கொடும் வினைகள் எம் ஜி ஆரை சுற்றி நடக்க, அதன் பின் சிறு சிறு வேடங்களில் சில திரைப்படங்களில் நடித்தார். சில காலம் கழித்து “மருத நாட்டு இளவரசி” என்ற திரைப்படத்தில் எம் ஜி ஆருக்கு கதாநாயக வேடம் கிடைத்தது.
அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் “ராஜகுமாரி” என்ற திரைப்படத்திலும் கதாநாயக வேடம் கிடைத்தது. “ராஜகுமாரி” திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
அப்போது எம் ஜி ஆர் தூக்கில் தொங்குவது போலும், எடை தாங்கமுடியாமல் உத்திரம் உடைந்து எம் ஜி ஆர் பாதாள அறைக்குள் விழுவது போலும் ஒரு காட்சியை இயக்குனர் விவரித்திருக்கிறார். டூப் எதுவும் போடாமல் நிஜமாகவே தூக்கில் தொங்கவேண்டும். இது எம் ஜி ஆருக்கு பெரும் சவாலாக இருந்தது. எம் ஜி ஆர் சிறிதளவும் தயங்கவில்லை.
எம் ஜி ஆர் தூக்கு மேடையில் ஏறியிருக்கிறார். இயக்குனர் “ஆக்சன்” என்று கூற, முதலில் சற்று தயங்கினாராம் எம் ஜி ஆர். ஆனால் எதை பற்றியும் நினைக்காமல் மறுநொடியே தூக்கில் தொங்கினார் எம் ஜி ஆர். அவரின் கழுத்து நெரிபட்டு மூச்சு விட முடியாமல் தவித்தார். இருதயம் நின்றுவிடுவது போல் இருந்திருக்கிறது. அடுத்த சில வினாடிகளில் உத்திரம் உடைந்தது. எம் ஜி ஆர் பாதாள அறையில் விழுந்தார்.
இப்படி தனது உயிரையும் துச்சம் என நினைத்து நடித்ததால் தான் பிற்காலத்தில் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்ற பட்டத்தை சொந்தமாக்கிக்கொண்டு ரசிகர்களின் மனதில் நிரந்தர சிம்மாசனத்தை போட்டு உட்கார்ந்தாரோ என்னவோ..