பத்மினிக்கு உதவி பண்ண போய் எம்ஜிஆரிடம் மாட்டிக் கொண்ட தயாரிப்பாளர்!..என்னாச்சி தெரியுமா?...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்து கொண்டு அரசராக வாழ்ந்தவர் நடிகரும் புரட்சித்தலைவருமான எம்ஜிஆர். முதலில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ‘சதீலீலாவதி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த எம்ஜிஆர் மக்கள் மத்தியில் வெற்றி கொடி நாட்ட ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் வசூல் சக்கரவர்த்தியாகவே உயர்ந்த எம்ஜிஆர் தான் நடிக்கும் படங்களில் தனது குறுக்கீடுகளை புகுத்த ஆரம்பித்தார். எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் என்றால் ஒட்டு மொத்த படத்தின் நிர்வாகத்தையும் தனக்கு கீழே கொண்டு வர ஆரம்பித்தார்.
அப்படி பட்ட படம் தான் எம்ஜிஆரின் நடிப்பில் வெள்ளிவிழா கண்ட ‘மதுரவீரன்’ திரைப்படம். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் எம்ஜிஆரின் விருப்பப்படியே அமைந்தன. இதில் நடிகை பத்மினி நடிக்க அவருக்கே உரித்தான நடன காட்சிகள் படத்தில் இடம் பெறாமையால் அந்த படத்தின் தயாரிப்பாளரான கிருஷ்ணன் பிக்சர்ஸ் நிறுவனர் லேடன் செட்டியார் எம்ஜிஆருக்கு தெரியாமல் பத்மினிக்காக ஒரு பாடல் காட்சியை எடுத்து விட்டார்.
படத்தை போட்டு பார்க்கையில் எம்ஜிஆருக்கு ஒரே அதிர்ச்சியாம். நமக்கு தெரியாமல் எப்படி இப்படி என்று கோபப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் செய்தாராம் எம்ஜிஆர். இந்த பிரச்சினையை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு தெரியப்படுத்த அவர் வந்து எம்ஜிஆரிடம் ‘ராமச்சந்திரா, நான் படத்தை பார்த்தேன், உன் விருப்பப்படியே படம் அமைந்திருந்தாலும் அதில் அமைந்த அந்த பாடல் கூடுதல் மெருகேற்றுவதாக இருக்கிறது. இது உனக்கு தானே லாபம்’ என்று கூறி சமாதானம் செய்து படத்தை ரிலீஸ் செய்ய வைத்தாராம் என்.எஸ்.கிருஷ்ணன். இந்த தகவலை கதாசிரியரும் பாடலாசிரியருமான கலைஞானம் கூறினார்.