Cinema History
உயிர் போகும் நிலையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்த நடிகர்… பின்னாளில் வில்லனாக மாறிய சுவாரஸ்ய சம்பவம்…
1947 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மாலதி, டி.எஸ்.பாலையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ராஜகுமாரி”. இத்திரைப்படம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கில் தொங்குவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியில் எம்.ஜி.ஆருக்கு நடந்த துயர சம்பவம் குறித்தும் தக்க சமயத்தில் உதவிய நடிகர் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
“ராஜகுமாரி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அப்போது வாழ்க்கையே வெறுத்துப்போய் அங்குள்ள தூக்கி கயிற்றில் தற்கொலை செய்துகொள்ளப்போகும் போது, எம்.ஜி.ஆரின் எடை தாங்காமல் அந்த கயிறு கட்டப்பட்டிருந்த உத்திரம் உடைந்து எம்.ஜி.ஆர் கீழே விழுந்துவிடுவார்.
இந்த காட்சியை படமாக்கியபோது உண்மையாகவே எம்.ஜி.ஆர் தூக்கில் தொங்கினாராம். அந்த தூக்கு கயிறு கட்டப்பட்டிருந்த உத்திரம் உடைந்து விழும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் தூக்கில் தொங்க கயிற்றை கழுத்தில் மாட்டியபின் அந்த உத்தரம் உடைவதற்கு சில வினாடிகள் தாமதமாகி விட்டதாம்.
அந்த தருணத்தில் அவரது ரத்தம் தலையில் சுர்ரென ஏறியதாம். மேலும் இருதயத்தில் வலியும் ஏற்பட்டதாம். சில வினாடிகள் இன்னும் தாமதப்பட்டிருந்தால் எம்.ஜி.ஆரின் உயிருக்கே பங்கமாய் போயிருந்திருக்குமாம்.
இதையும் படிங்க: சிவாஜியின் ஆக்டிங் ஸ்டைலை மாற்ற தயாரிப்பாளர் செய்த யுக்தி… எப்படியெல்லாம் மெனக்கெட்ருக்காங்க பாருங்க!!
அந்த உத்திரம் உடைந்து எம்.ஜி.ஆர் கீழே விழுந்தவுடன், அவர் மேல் அந்த உடைந்த உத்திரத்தின் கட்டைகளும் விழுந்தன. இதனை பார்த்த படக்குழுவினர் எம்.ஜி.ஆரை நோக்கி ஓடினர். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் மிகுந்த களைப்போடு இருந்தார். அப்போது அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த நம்பியார் எம்.ஜி.ஆரின் நிலையை பார்த்து உடனே குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாராம். இதில் இருந்தான் நம்பியாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கமான நட்பு தொடங்கியதாம். பின்னாளில் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் நம்பியார் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.