Cinema History
எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…
50,60 களில் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கண்ணதாசன். காதல், தத்துவம், சோகம், கண்ணீர், விரக்தி, ஏமாற்றம், நம்பிக்கை என எந்த மாதிரியான சூழ்நிலைகளுக்கும் அசத்தலாக பாடல் வரிகளை எழுதிவிடுவார். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இவர் பல நூறு பாடல்களை எழுதியிருக்கிறார். கண்ணதாசனின் பாடல்கள் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, அவரின் படங்களுக்கு பாடல் எழுதுவதை நிறுத்திக்கொண்டார். கண்ணதாசன் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர். எம்.ஜி.ஆர் திமுக பக்கம் இருந்தார். எனவே, அரசியல் மேடைகளிலும் எம்.ஜி.ஆரை கடுமையாக தாக்கிப்பேசினார் கண்ணதாசன். மேலும், ஒரு வாரப்பத்திரிக்கையில் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும் கட்டுரை எழுதி வந்தார்.
ஒருபக்கம் படங்களை தயாரித்ததில் கண்ணதாசனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. பலருக்கும் கடன் கொடுக்க வேண்டியிருந்ததால் வேறு வழியில்லாமல் அவர் வசித்து வந்த வீடு ஏலத்திற்கு செல்லும் நிலையும் ஏற்பட்டது.
ஒருநாள் எம்.ஜி.ஆர் தனது இராமாபுரம் வீட்டில் தனது உதவியாளர் ரவீந்தருடன் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிய எம்.ஜி.ஆர் எதிர்முனையில் பேசியருக்கு ஆறுதல் சொன்னார். மேலும், ‘தற்கொலை கோழைத்தனமான முடிவு.. அதை செய்தால் பாவம் வந்து சேரும்..’ என அறிவுறையும் சொன்னார். அதோடு ‘நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன்’ என நம்பிக்கையும் கொடுத்தார். தொடர்ந்து 15 நிமிடம் பேசினார். இறுதியாக ‘அழாதீர்கள் போனை வையுங்கள்.. நாளைக்கே குஞ்சப்பனிடம் கொடுத்து அனுப்புகிறேன்’ என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
அவரிடம் ரவீந்தர் ‘யாரிடம் பேசினீர்கள்?’ என கேட்டதற்கு ‘கண்ணதாசன் பேசினார். அவரின் வீடு ஏலத்திற்கு வருகிறதாம். கஷ்டங்களை அவரே தேடிக்கிட்டு இப்போது கண் கலங்குகிறார்’ என சொல்ல, ‘உங்களை எப்படியெல்லாம் திட்டினார்.. பத்திரிக்கையில் இல்லாததையும், பொல்லாததையும் எழுதினார்.. அவருக்கு உதவ வேண்டுமா?’ என ரவீந்தர் கேட்க, எம்.ஜி.ஆரோ ‘எல்லோரும் நம்மை புகழ்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் சுவை இருக்காது. திட்டுபவர்களும் இருக்க வேண்டும்’ என்றாராம். மேலும், அவர் கொடுத்து வாக்குறுதிபடி கண்ணதாசனின் வீட்டை மீட்டு அவருக்கு கொடுத்தார்.
தன்னை கடுமையாக திட்டியவர்களுக்கும் எம்.ஜி.ஆர் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.