எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டுப் போன நலிந்த நடிகர்!. பொன்மனச்செம்மல் செய்த அதிசயம்!..
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் துணை நடிகர் ஒருவருக்கு செய்த உதவி குறித்து பிரபல பத்திரிகையாளர் சபீதா ஜோசப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நலிந்த நாடக நடிகன் மனைவியோட நகைகளை மார்வாடி கடையில் அடகு வைத்து வீட்டைக் கட்டினார். அந்தக் கடனை அடைக்க முடியாமல் திணறினார். நாலைந்து படங்களில் நடித்து தன் நகையை மீட்டு விடலாம் என்று நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் நகை மூழ்கப் போகிறது. இந்த நகையை மீட்டுத் தான் தன் பொண்ணோட கல்யாணத்தையே நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.
நலிந்த கலைஞருக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது. யாருமே அவருக்குத் தர முடியாது. யாரிடம் கடன் கேட்பது என்றும் அவருக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரைப் போய் பாருங்க என அவரது மனைவியும் சொல்கிறார்.
இவர் தன் கையால் இடித்த அவலை குசேலன் கிருஷ்ணரிடம் கொடுப்பது போல கொடுக்க வேண்டும் என்று எம்ஜிஆருக்குக் கொண்டு செல்கிறார். இந்த நாடக நடிகர் கே.வி.சீனிவாசன். இவர் கடைசியாக நடித்த படம் ஆதிபராசக்தி. இதில் அபிராமி பட்டர் வேடத்தில் நடித்தார். சிவாஜி, எம்ஜிஆருடனும் சேர்ந்து நாடகங்களில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார்.
எம்ஜிஆர் அவரைப் பார்த்ததும் 'வாங்க வாங்க நல்லாருக்கீங்களா' என வரவேற்கிறார். அதன்பிறகு அவர் கொண்டு வந்த அவலை எம்ஜிஆரிடம் கொடுக்கிறார். அவலைப் பார்த்ததும் எம்ஜிஆருக்கு குசேலன் நினைவு வந்துவிடுகிறது. இவர் உதவி கேட்டுத் தான் வந்து இருக்கிறார் என எம்ஜிஆர் நினைத்துக் கொள்கிறார். 'மதியம் என் கூட சேர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும்' என சொல்லிவிட்டு நடிக்க சென்று விடுகிறார்.
மதியம் சாப்பிட்டு முடிந்ததும் எம்ஜிஆர் இவரை வழி அனுப்பி வைக்கிறார். ஆனால் ஒன்றும் கொடுக்கவில்லை. அவரும் எம்ஜிஆரிடம் தன் கோாிக்கைகளை வைத்தாயிற்று. இனி நடப்பது நடக்கட்டும் என்று வீட்டுக்கு வருகிறார். ஆனால் அவர் வந்ததும் அவரது மனைவி சொல்கிறார். இங்கு எம்ஜிஆர் அனுப்பி வைத்ததாக ஒருவர் வந்து கவரை தந்தார். அதில் நகையை மீட்கத் தேவையான பணத்தை விட அதிகமான தொகை இருந்ததாம்.
வீட்டில் அவரது மனைவி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதன் மூலம் நகையை மீட்டு தன் பெண்ணோட திருமணத்தையும் நடத்தி விட்டாராம். மக்கள் திலகம் எம்ஜிஆர் குறிப்பறிந்து உதவுவதில் வள்ளல் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.