மனஸ்தாபத்தை கலைத்த எம்.ஜி.ஆர்… கலங்கிப்போன இயக்குனரை கைத்தூக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம்…
தமிழின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்த சி.வி.ஸ்ரீதர், “கல்யாணப் பரிசு”, “வெண்ணிற ஆடை”, “காதலிக்க நேரமில்லை”, போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே 1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரை வைத்து “அன்று சிந்திய ரத்தம்” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் ஸ்ரீதர்.
ஆனால் அதே நேரத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோரின் நடிப்பில் “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தையும் ஸ்ரீதர் இயக்குவதாக இருந்தது. இதில்தான் ஒரு புதிய சிக்கல் எழுந்தது.
ஸ்ரீதர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்க இருந்த “அன்று சிந்திய ரத்தம்” திரைப்படம் கருப்பு வெள்ளை திரைப்படம். ஆனால் ஸ்ரீதர் “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தை வண்ணத்தில் எடுக்க முடிவு செய்திருந்தார்.
“உங்களை போன்ற பெரிய நடிகரை வைத்து கருப்பு வெள்ளை திரைப்படத்தை இயக்குகிறார். ஆனால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை வண்ணத்தில் இயக்குகிறாரே” என எம்.ஜி.ஆரிடம் பலரும் திரித்து கூறியிருக்கின்றனர்.
ஆதலால் “அன்று சிந்திய ரத்தம்” திரைப்படம் அப்படியே முடங்கியது. இதனை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்தார் ஸ்ரீதர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் தோல்விகளை கண்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்குள் விழுந்தார் ஸ்ரீதர்.
இந்த நிலையில் ஸ்ரீதரின் நண்பரும் ஹிந்தி நடிகருமான ராஜேந்திர குமார், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்தால், மீண்டும் விட்ட இடத்தை பிடித்துவிடலாமே என யோசனை கூறியிருக்கிறார். இது நல்ல யோசனைதான் என்றாலும், சில வருடங்களுக்கு முன் “அன்று சிந்திய ரத்தம்” திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது நடந்த சம்பவம் ஸ்ரீதரின் கண் முன்னே வந்துபோனது.
அதனால் எம்.ஜி.ஆரைச் சென்று சந்திக்க முதலில் தயங்கினார் ஸ்ரீதர். எனினும் அந்த இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆரை பல நிகழ்ச்சிகளில் தற்செயலாக சந்தித்திருந்தார் ஸ்ரீதர். அப்போதெல்லாம் “நிச்சயமாக இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம்” என எம்.ஜி.ஆர் கூறியிருந்தாராம். எம்.ஜி.ஆர் கூறிய இந்த வார்த்தைகளின் மேல் நம்பிக்கை வைத்துக்கொண்டு ஸ்ரீதர் தனது நண்பர் ஒருவரிடம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை பெற உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டாராம்.
இந்த செய்தி எம்.ஜி.ஆரின் காதுக்குச் சென்றது. அப்போது எம்.ஜி.ஆர் “ஸ்ரீதரின் படத்தில் நடிக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவரை என்னுடைய வீட்டிற்கு வரச்சொல்லவேண்டாம். நம்பியாரின் வீட்டிற்கு வரச்சொல்லுங்கள். அங்கே சந்திக்கலாம்” என கூறினாராம்.
(எம்.ஜி.ஆர் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா? அதாவது ஸ்ரீதர், எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் சென்றால், “எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஸ்ரீதர் கால்ஷீட் வாங்கினார்” என பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். இது போன்ற தேவையில்லாத விமர்சனங்கள் எழ வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் எம்.ஜி.ஆர் அப்படி சொன்னாராம். பின்னாளில் ஸ்ரீதரே இது குறித்து ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியோடு கூறியிருந்தாராம்.)
எம்.ஜி.ஆரின் இந்த பெருந்தன்மையை பார்த்து வியந்துபோன ஸ்ரீதர், “பத்திரிக்கைகள் என்ன எழுதினாலும் பரவாயில்லை, நான் எம்.ஜி.ஆரை அவரது வீட்டிற்கேச் சென்று சந்திக்கிறேன்” என கூறி அதற்கு அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்குச் சென்றாராம் ஸ்ரீதர்.
அங்கே எம்.ஜி.ஆருடன் உணவருந்திவிட்டு விடைபெறும்போது, “நான் இப்போது மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறேன். உங்களை வைத்து படம் எடுத்தால் நான் நிச்சயமாக நல்ல நிலைக்கு வந்துவிடுவேன்” என ஸ்ரீதர் கூறினாராம். இதனை கேட்ட எம்.ஜி.ஆர் தனது உதவியாளரை அழைத்து ஒரு கடிதத்தை எடுத்து வர சொல்லியிருக்கிறார். அந்த கடிதத்தில் “நான் ஸ்ரீதரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர் படத்திற்கு முன்னுரிமை தந்து, மூன்று மாதங்களுக்குள் அவர் படத்தில் நடித்து முடித்துத்தர சம்மதிக்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. அதில் எம்.ஜி.ஆர் தனது கையெழுத்தையும் இட்டார்.
இதையும் படிங்க: கௌதம் மேனனுக்கு நடந்த லவ் ஃபெயிலர்!! சினிமா வசனமாக மாறிப்போன முன்னாள் காதலியின் வார்த்தைகள்…
“இந்த கடிதத்தை ஃபைனான்சியர்களிடம் கொடுங்கள். உங்களுக்கு நிச்சயமாக படம் தயாரிக்க பணம் கிடைக்கும்” என எம்.ஜி.ஆர் கூறினாராம். இதனை கேட்ட ஸ்ரீதருக்கு புல்லரித்துவிட்டதாம். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் “உரிமைக் குரல்” திரைப்படம் உருவாகியிருக்கிறது. இவ்வாறு பழைய மனஸ்தாபங்களை எல்லாம் மறந்து ஸ்ரீதருக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளார் எம்.ஜி.ஆர்.