ஒரே ஆண்டில் 9 படங்களில் கலக்கிய வேட்டைக்காரன்....காமராஜரையே பேச வைத்த எம்ஜிஆர்...!
தற்போதெல்லாம் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பதற்கேத் திணறி வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரே ஆண்டில் 9 படங்களை அசால்டாக நடித்தார்.
படங்கள் எல்லாமே மெகா ஹிட்...தான்..இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இதுபற்றி இப்போது பார்ப்போம்.
1963ல் வெளியான எம்ஜிஆர் படங்கள் திரையுலக வாழ்வில் முத்திரை பதித்தன. ஒரே ஆண்டில் 9 படங்கள். அவை... பணத்தோட்டம், பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப்பின் பாசம், பரிசு, தர்மம் தலைகாக்கும், கலை அரசி, காஞ்சித்தலைவன், கொடுத்து வைத்தவள்.
ஆனந்தஜோதி படத்தில் எம்ஜிஆருடன் முதன் முதலாக இணைந்து நடித்தார் தேவிகா. கமல் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரத்தில் நடித்தார். இந்த ஆண்டில் தேவர் பிலிம்ஸின் 2 படங்கள் வந்தன. தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம். இவை இரண்டும் மெகா ஹிட்டாயின.
டி.ஆர்.ராமண்ணா இயக்கிய 2 படங்கள் கொடுத்து வைத்தவள், பெரிய இடத்துப் பெண். இவை இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. டி.யோகானந்த் இயக்கிய பரிசு என்ற படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேலுமணி சிவாஜியை வைத்தே படங்களை எடுத்தார். முதன் முதலாக எம்ஜிஆரை வைத்துத் தயாரித்த பணத்தோட்டம் என்ற படம் வெளியானது. கலை அரசி படமும் அதே ஆண்டில் தான் வெளியானது.
மேகலா பிக்சர்ஸின் காஞ்சித்தலைவன் படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப் படத்தைக் கலைஞரும், எம்ஜிஆரும் இணைந்து தயாரித்தனர்.
1961ல் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். இவர் சத்யா மூவீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது தயாரிப்பில் வெளியான முதல் படம் தெய்வத்தாய் இந்த ஆண்டில் தான் வெளியானது.
அதே ஆண்டில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான என் கடமை படம் தோல்வியைத் தழுவியது. இத்தோடு எம்ஜிஆரது சகாப்தம் முடிந்தது என்று நினைத்தனர் அவரது எதிரிகள்.
ஆனால் ஜி.என்.வேலுமணி தயாரித்த படகோட்டி படம் வசூல் வேட்டை நடத்தியது. அது வயிற்றெரிச்சல் அடைந்தவர்களின் வாயை அடைத்தது. தொடர்ந்து வந்த பணக்காரக்குடும்பம், தாயின் மடியில் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன.
இந்த ஆண்டில் தேவர் பிலிம்ஸின் வேட்டைக்காரன், தொழிலாளி ஆகிய படங்கள் மெகா ஹிட்டடித்தன. அது சென்னை மாநகராட்சித் தேர்தல் சமயம்.
எம்ஜிஆரின் பிரசாரம் திமுகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் காமராஜரே எம்ஜிஆரை மறைமுகமாக இப்படி சொன்னார். வேட்டைக்காரன் வருவான், ஏமாந்திராதீங்க...
கர்ம வீரரே இப்படி சொல்லியிருக்கிறார் என்றால் எம்ஜிஆரின் அபார வளர்ச்சி எப்படிப் பட்டது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.