இரட்டை வேடத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு வெறியா?? ஃப்ளாப் ஆன படத்தை ஹிட் அடிக்க வைத்த புரட்சித் தலைவர்…
1940 ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா, எம்.வி.ராஜம்மா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “உத்தம புத்திரன்”. இத்திரைப்படத்தை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் “தி மேன் இன் தி ஐயர்ன் மாஸ்க்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் ஹீரோ பி.யு.சின்னப்பாதான்.
“உத்தம புத்திரன்” திரைப்படத்தில் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்ததின் தாக்கத்தில் தானும் எப்படியாவது இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
மேலும் பி.யு.சின்னப்பாவின் “உத்தம புத்திரன்” திரைப்படத்தின் கதையம்சத்தை அப்படியே எடுத்துக்கொண்டு சில மாறுதல்களை செய்து அதில் நடிக்கலாம் என எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். ஆனால் அந்த தருணத்தில்தான் சிவாஜி கணேசன், “உத்தம புத்திரன்” திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.
பி.யு.சின்னப்பாவின் “உத்தம புத்திரன்” திரைப்படத்தின் உரிமத்தை இயக்குனர் ஸ்ரீதர்தான் பெற்றிருந்தாராம். அவர் சிவாஜி கணேசனை வைத்து அத்திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது.
எனினும் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற வெறி அடங்கவில்லையாம். அந்த வெறியால் அவர் இயக்கிய திரைப்படம்தான் “நாடோடி மன்னன்”. இத்திரைப்படம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்தார். இதில் வீராங்கன், மார்த்தாண்டம் என்ற இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.
1937 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான “தி பிரிசனர் ஆஃப் ஜென்டா” என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் “நாடோடி மன்னன்”. “தி பிரிசனர் ஆஃப் ஜென்டா” திரைப்படத்தை தழுவி ஏற்கனவே ஹிந்தியில் ஒரு திரைப்படம் உருவானது.
ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. அப்படி இருந்துமே எம்.ஜி.ஆர் அத்திரைப்படத்தை தழுவி தமிழில் “நாடோடி மன்னன்” என்ற பெயரில் உருவாக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் சினிமா கேரியரிலும் அரசியலிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.