இசையமைக்க முடியாது; அடம்பிடித்த எம்.எஸ்.வி: வீட்டுக்கு போய் சம்மதம் வாங்கிய எம்.ஜி.ஆர்..
எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் உண்டு. தனக்கு ஒருவரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்கள்தான் தான் நடிக்கும் படம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும் என ஆசைப்படுவார். அதே நேரம் சில சூழ்நிலைகளில் அது மாறி வேறு ஒருவரை நியமித்து, அதில் திருப்தி இல்லாமல் தனக்கு பிடித்தவரையே மீண்டும் அழைப்பார்.
எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்கிற பெயரில் ஒரு நிறுவனம் துவங்கி ’உலகம் சுற்றும் வாலிபன்’ என்கிற படத்தை எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்தார். இந்த படத்திற்கு எம்.எஸ்.விதான் இசை என முடிவெடுத்த எம்.ஜி.ஆர் அதை அவரிடம் சொல்லிவிட்டார். ஆனால், அப்போது பிரபலமாக இருந்த குன்னக்குடி வைத்தியநாதனை இசையமைக்க சொல்லலாம் என நினைத்து அவரை வைத்து பூஜையும் நடந்து அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. 4 பாடல்களும் உருவானது.
இதை செய்திதாளில் பார்த்த எம்.எஸ்.வி குழம்பி போய்விட்டார். சரி எம்.ஜி.ஆர் விருப்பம் அது என நினைத்துவிட்டார். ஆனால், எம்.எஸ்.வி.யே இசையமைத்தால் சரியாக இருக்கும் என நினைத்த எம்.ஜி.ஆர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேச ‘குன்னக்குடி வைத்தியநாதன் என நீங்கள் அறிவித்துவிட்டீர்கள். சில பாடல்களை அவர் போட்டுவிட்டார். இனிமேல் நான் இசையமைத்தால் நன்றாக இருக்காது. அவரே இசையமைக்கட்டும். நான் இசையமைக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டாரம்.
இதையடுத்து நேராக எம்.எஸ்.வியின் வீட்டிற்கே சென்ற எம்.ஜி.ஆர் அவரின் தாய் மற்றும் மனைவியிடம் ‘உங்கள் மகன் இப்படி சொல்கிறார். இது நியாயமா?’ என பேசிக்கொண்டிருக்கும்போதே எம்.எஸ்.வி வீட்டிற்கு வந்துவிட்டாராம். நீ இசையமைக்க சம்மதம் சொன்னால்தான் நான் உன் வீட்டில் சாப்பிடுவேன் என எம்.ஜி.ஆர் சொல்ல எம்.எஸ்.வியும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிறப்பான பாடல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.